2014ஆம் ஆண்டில் நகர்மன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 16 சாலைகள் குறித்தும்,
2014ஆம் ஆண்டில் நகர்மன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர எல்.இ.டி. மின்விளக்குப் பணிகள் குறித்தும்,
46 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடற்கரையை இணைக்கும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை குறித்தும்,
நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் செய்து வருகிற மற்றும் வரி ஏய்ப்பு செய்து வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும்
நகராட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஆணையருக்கு உத்தரவிடுமாறு இன்று (11.01.2016. திங்கட்கிழமை) காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.
ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் கொடுக்க நகர்மன்றத்தின் அவசர கூட்டம் கூட்டுவது குறித்து வழங்கப்பட்ட மனு
சி-கஸ்டம்ஸ் சாலை டெண்டர் முடிவுகளை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு
LED உயர் மின் கோபுரங்கள் டெண்டர் முடிவுகளை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு
DCW தொழிற்சாலை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல் செய்து அது குறித்த அறிக்கையயை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு
மேலும், காயல்பட்டினம் நகராட்சியின் நடப்பு நிலை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறியதாக, நாளிதழ் ஒன்றில் (தினமலர்) ஜனவரி 05, 2016 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதுகுறித்த தனது விளக்கத்தை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், பின்வருமாறு அறிக்கையாக செய்தியாளர்களிடம் வழங்கினார்:-
ஜனவரி 4., 2016 அன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திரு ம.ரவிகுமார் IAS அவர்கள் காயல்பட்டினம் நகராட்சி குறித்து சொன்னதாக சில கருத்துக்கள் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இது போன்ற கருத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்னை சந்திக்க வரும் சிலரிடம் கூறி வருவதாக நான் கேள்வியுற்றிருந்தாலும், ஊடகம் வாயிலாக அக்கருத்து வெளிப்படுத்தப்படும் போது, அதற்கான விளக்கத்தை வழங்குவது எனது கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
மாவட்ட ஆட்சியர் கூறியதாக வெளிவந்த ஜனவரி 05, 2016 நாளிதழ் (தினமலர்) செய்தி:-
"காயல்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முடியவில்லை. கடைசியாக ரோடு போடும் பணிக்குரிய தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்து நிறைவேற்றினோம். ஆனால் அதற்கு ஸ்டே வாங்கி விட்டனர். 16 கோடி ருபாய் பணம் வீணாக இருக்கிறது. காயல்பட்டினத்தில் வீடுகள் எல்லாம் பெரிய, பெரிய வீடுகளாக இருக்கிறது. ஆனால் ரோடுகள் மோசமாக இருக்கிறது. பணம் இருந்தும் போட முடியாத நிலை இருக்கிறது. குறைகள் ஏதுமிருந்தால் தெரிவிக்கலாம். அதில் உண்மை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்."
காயல்பட்டினம் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டங்களில் கடந்த 4 1/4 ஆண்டுகளில் ஏறத்தாழ 1100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானங்களை நிறைவேற்றும் பணியை நகர்மன்றம் செவ்வனே செய்துதான் வருகிறது. இங்கு பிரச்சனை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் அல்ல; அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவருவதில்தான்!
மக்கள் பிரதிநிதிகளால் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும்; அந்தத் தீர்மானங்களை டெண்டர் படிவங்களாக மாற்றுவது, நாளிதழ்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, ஒப்பந்தாரருக்கு வேலை ஆணை வழங்குவது, வேலை ஆணைகள் படி பணிகளை நிறைவேற்றுவது - இவையனைத்தும் ஆணையரின் கடமை.
உதாரணமாக - ஜூன் 2014 இல் 22 சாலைகளுக்கு நகர்மன்றம் ஒப்புதல் கொடுத்தது. அதில் 16 சாலைகளுக்கான பணிகள் - 17 மாதங்கள் ஆகியும், இன்று வரையும் துவக்கப்படவில்லை. எந்த நீதிமன்றத் தடையும் அந்த சாலைகளுக்கு இல்லை.
அதே ஜூன் 2014 மாதத்தில், 29.5 லட்ச ரூபாய் மதிப்பில், LED உயர் மின் கோபுரங்கள் நிறுவ - தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த பணிகளுக்கு, 14 மாதங்கள் கழித்து - ஆகஸ்ட் 2015இல் - ஆணையர் டெண்டர் விட்டார். எந்த நீதிமன்ற தடையும் அந்த பணிகளுக்கு இல்லை. ஆனால் அந்த டெண்டர் முடிவுகளை - இதுவரை - ஆணையர் திரு ம.காந்திராஜன், நகர்மன்றத்தின் பார்வைக்கே கொண்டுவரவில்லை.
மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது போல, நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவை இரண்டு தீர்மானங்கள் மட்டுமே! எஞ்சிய தீர்மானங்கள் மீது இன்றளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு - காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளுக்கும், சில காண்ட்ராக்டர்களுக்கும் உள்ள பலமான கூட்டணியே காரணம்.
காண்ட்ராக்டர்கள் சௌகரியப்படியே டெண்டர் விடப்படுகிறது, புதிதாக எந்த காண்ட்ராக்டர்களையும் பதிவு செய்ய விடுவதில்லை. இ-டெண்டர் மூலம் புதிதாக ஒரு ஒப்பந்ததாரர் டெண்டரில் கலந்துகொண்டுவிட்டால், அந்த டெண்டரையே காணாமல் ஆக்கிவிடுகிறார்கள். இதுதான் - காயல்பட்டினம் நகராட்சியின் கசப்பான உண்மை.
ஜூலை 2015இல் - முறையாக மதிப்பீடு தயாரிக்காமல், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளால் முயற்சி செய்யப்பட்டது. இதில் உள்ள தவறினை ஈமெயில், FAX உட்பட பல வழிகளில், மாவட்ட ஆட்சியர் உட்பட நகராட்சி சம்பந்தமான அதிகாரிகளுக்கு நான் தெரிவித்தேன். சட்டத்திற்குப் புறம்பாக நகர்மன்றத் தலைவரை ஒதுக்கிவிட்டு, துணைத் தலைவர் மூலம் கூட்டத்தை நடத்தி, நிறைவேற்றப்பட்ட அதற்கான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆட்சியரிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. அதன் பிறகே, அந்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை வழங்கியது.
காயல்பட்டினம் நகராட்சியில் 16 கோடி ரூபாய் வீணாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும் அதே ஊடக செய்தியில் உள்ளது. சம்பந்தப்பட்ட நகர்மன்றத்தின் தலைவர் - RTI சட்டம் மூலம் கேட்ட பின்பும் கூட ஆணையரால் வழங்கபடாத அரிய தகவல் ஒன்றை மாவட்ட ஆட்சியர் இங்கே வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யத் தவறும்போதும், முறைகேடுகளில் ஈடுபடும்போதும், மக்கள் பிரதிநிதிகளால் உயர் அதிகாரிகளிடம் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். மக்களுக்கு கஷ்டம் கொடுத்து, தங்கள் சுயலாபத்திற்காகவும் - மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து வரும் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகள் - மக்கள் பிரதிநிதிகள் மீது வீண் பழியை சுமத்துவது, வேடிக்கையான - வருந்தத்தக்க செயல்மட்டும் அல்ல; அபத்தமான - திசைதிருப்பும் செயலுமாகும்.
‘குறைகள் ஏதுமிருந்தால் தெரிவிக்கலாம். அதில் உண்மை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த செய்தியில் தெரிவித்திருப்பதால், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரால் செயல்முறைக்கு கொண்டு வரப்படாமல் இருக்கும் சில தீர்மானங்கள் விபரங்களை (16 சாலைகள் + 1 பாலம், சி-கஸ்டம்ஸ் சாலை, LED உயர்மின் கோபுரங்கள், DCW தொழிசாலை) - இன்று மனுவாக, மாவட்ட ஆட்சியிரிடம் சமர்ப்பித்துள்ளேன். தீர்மானங்களை செயல்முறைக்கு கொண்டு வர, ஆணையருக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு - மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, பிரிவு 35 வழங்கியிருப்பதால், என் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.
THE TAMIL NADU DISTRICT MUNICIPALITES ACT, 1920
35. Collector's power to enforce execution of resolutions.— If it appears to the District Collector that the Executive Authority of a Municipality has made default in carrying out any resolution of the Council, the said Collector, after giving the Executive Authority, a reasonable opportunity of explanation, shall send a report thereon together with the explanation, if any, of the Executive Authority to the State Government and at the same time forward a copy of the same to the Council.
இவ்வாறு அந்த அறிக்கை வாசகம் அமைந்துள்ளது. |