காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 51ஆவது ஆண்டு விழா 4 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில், பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்கான திறனாய்வுப் போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, அனைத்து தரப்பினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, அருணாச்சலபுரம் ஊர் நலக்கமிட்டி தலைவர் தி.திருத்துவராஜ் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் மன்ற உறுப்பினர் சா.செல்வகுமார், பிரம்மானந்தன், விவேகானந்தன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சு.அமிர்தலிங்கம் வரவேற்றுப் பேசினார். கடையக்குடி (கொம்புத்துறை) பங்குத் தந்தை விக்டர் லோபா வாழ்த்துரையாற்றினார்.
இவ்விழாவில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சியில் சாலைத் திட்டங்கள், ரேஷன் கடை கட்டிடங்கள் என பல்வேறு பணிகளுக்காக சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை தான் ஒதுக்கிக் கொடுத்தும், நகர்மன்றம் செயல்படாத காரணத்தால், அந்த நிதி செலவழிக்கப்படாமல் காலாவதியாகும் நிலை ஏற்பட்டு, வேறு ஊர்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மது அருந்தி பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே உள்ளதாகவும், அவர்கள் அடக்கியொடுக்கப் படுவதற்கு மதுவே காரணமாக உள்ளதாகவும் கூறிய அவர், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் திமுக ஆட்சி தமிழகத்தில் மலரப் போவதாகவும் கூறினார். மதுவைத் தொட மாட்டேன் என உறுதிகொள்ளுமாறு அவர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
விழாவில், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ.பி.ரமேஷ், ஆறுமுகநேரி பேரூராட்சித் தலைவர் அ.கல்யாண சுந்தரம், காயல்பட்டினம் நகர்மன்ற 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, கே.எஸ்.ஏ.முத்து முஹம்மத், வணிகர் சங்கத் தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் காதர், கேஸ்கர், ஆகாச முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
‘செய்தியாளர்’ ச.பார்த்திபன்
அருணாச்சலபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |