காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக 5 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 12.12.2015 சனிக்கிழமையன்று, அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
துணைத் தலைவர் ஹாஃபிழ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் கிலுர் முஹம்மது ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
செயலாளர் எம்.செய்யது அஹமது கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நடப்பு நிலை குறித்து விவரித்துப் பேசினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
2. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |