காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 27, 2012 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 7922]
வெள்ளி, ஐனவரி 27, 2012
பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை அமைய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! முழு விபரம்!!
செய்தி: காயல்பட்டணம்.காம்
காயல்பட்டினத்தின் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பெரிய நெசவு தெரு வழியாக இப்பாதை அமையக்கூடாது என அத்தெருவை சார்ந்த அஹமத் மொஹிதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கில் - ஜூலை 27, 2010 அன்று ஆணை பிறப்பித்த உயர்நீதிமன்றம், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தது.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று நகரில் நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS - காயல்பட்டினத்தில் ஒரு வழி பாதை அமைவது குறித்து தற்போது ஆணை பிறப்பித்துள்ளார். அதில் -
<> பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக தற்போது நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போக்குவரத்து இயக்கப்படவேண்டும் என்றும்
<> பெரிய நெசவு தெரு நுழைவில் மற்றும் இதர இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளையும் உடனடியாக நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும் என்றும்
<> மாற்று பாதையாக பொதுமக்களில் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட நீரோடை பாதையில் வருங்காலங்களில் சாலை அமைத்து - பஜார் மற்றும் இதர சாலைகளின் போக்குவரத்தினை குறைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும் என்றும்
உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள ஆணையின் முழு விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சார்ந்த அஹ்மத் மொஹிதீன் என்பவர் - சென்னை உயர்நீதி மன்றத்தின், மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார் (WP [MD] No.9446 of 2010). அதில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழி பாதை அமைய தடை விதிக்கும்படி கோரியிருந்தார். அந்த வழக்கில் (WP [MD] No.9446 of 2010) - மாவட்ட ஆட்சியர் பெரிய நெசவு தெரு பாதையை ஆய்வு செய்து, காயல்பட்டினத்தில் ஒரு வழி பாதை அமைவது குறித்து உரித்த ஆணையை பிறப்பிக்க வேண்டும் என - ஜூலை 27, 2010 அன்று (உயர் நீதி மன்றம்) உத்தரவிட்டது.
இது குறித்து மனுதாரர், திருச்செந்தூர் DSP, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், திருச்செந்தூர் தாசில்தார், காயல்பட்டின நகர்மன்ற ஆணையர், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆகியோர் டிசம்பர் 21, 2011 அன்று விசாரிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
பரிந்துரைக்கப்பட்ட ஒரு வழிப்பாதையும், மாற்றாக பொதுமக்களின் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட பாதையினையும் - மாவட்ட ஆட்சியர் - டிசம்பர் 30, 2011 அன்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அவருடன் - மண்டல போக்குவரத்து அலுவலர் (RTO), திருச்செந்தூர் RDO, திருச்செந்தூர் DSP, திருச்செந்தூர் தாசில்தார், காயல்பட்டின நகர்மன்ற ஆணையர், போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதுபோல் பெரிய நெசவு தெருவினை ஆய்வு செய்த போது - பெரிய நெசவு தெருவின் அகலம் 35 அடி முதல் 40 அடி வரை இருந்தது (சில இடங்களில் சிறிது வேறுப்பட்டது). ஆய்வு செய்யப்படும் வேளையில் அத்தெரு - ஒரு வழிப்பாதை அன்றி, இரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தெருவில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் - இத்தெருவினை தொடர்ந்து இருக்கும் (எல்.கே.லெப்பை தம்பி என்ற) சாலையில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. சில குறுக்கு தெருக்கள் - இந்த இரு தெருக்களுடன் இணைகின்றது. இதற்கு முன்னரே இப்பாதை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அப்பாதையில் பேரூந்துகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் சென்றுள்ளன.
பொதுமக்களில் சிலரால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பாதையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாற்றுப்பாதையில் குறைந்தது நான்கு இடைஞ்சல்கள் காணமுடிந்தது. உதாரணமாக - குறுகிய சாலை மற்றும் திடீர் வளைவுகள். மேலும் இப்பாதையில் உள்ள நீரோடையின் மேல் பாதை அமைக்கவேண்டும். அப்பாதை மேலே குறிப்படப்பட்டுள்ள இடைஞ்சல்கள் கொண்ட குறுகிய சாலைகளில் சென்றடைகிறது. தற்போது - இப்பாதை பயன்படுத்த சாத்தியமாக இருப்பதாக தெரியவில்லை.
பொது மக்களில் பெருவாரியானோர் - முன்னர் இருந்தது போல் - பெரிய நெசவு தெருவழியாக - ஒரு வழிப்பாதை அமைய வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களில் ஒரு பகுதியினர் - மேலே குறிப்பிட்டது போல் - மாற்றுப்பாதையை பரிந்துரைத்தனர். தற்போது உள்ள சாலைகளில் ஏதாவது சாலை வழியாக ஒரு வழிப்பாதை அமைவதை யாரும் எதிர்க்கவில்லை. ஏன் எனில் எல்லோரும் பஜார் சாலை (மாநில நெடுஞ்சாலை 176) குறுகியது என்றும், இனியும் தொடர்ந்து இச்சாலை இரு வழி போக்குவரத்தை தாங்காது என்றும், குறிப்பாக பேருந்துகள், கார்கள், லாரிகள் போன்ற நான்கு சக்கர வாகன போக்குவரத்தை தாங்காது என்றும் உணர்ந்திருந்தனர்.
மண்டல போக்குவரத்து அலுவலர் (RTO), தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மண்டல மேலாளர், திருச்செந்தூர் DSP மற்றும் காயல்பட்டின நகர்மன்ற ஆணையர் ஆகியோர் கருத்துக்கள்படி - பரிந்துரைக்கப்பட்ட ஒரு வழிப்பாதை மிக அவசியம் என தெளிவாக தெரிகிறது. மேலும் காயல்பட்டின நகர்மன்ற ஆணையர் தெரிவித்தது படி பஜார் சாலையில் - நிரந்தர சாலையோர ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லை. கடை உரிமையாளர்களால் அமைக்கப்பட்டுள்ள வெயிலினை தடுக்கும் கூரைகளும், தற்காலிக கூரைகளும் தான் உள்ளன. அவைகளும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே - களத்தில் நேரடியாக மேற்கொண்ட ஆய்வின் படியும், அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாத பலரிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள்/கருத்துக்கள் அடிப்படையிலும் கீழ்க்காணும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
1) பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு வழிப்பாதை - துவக்கமாக - பேருந்துகள், லாரிகள், கார்கள், ஜீப்கள், ஆட்டோக்கள் போன்ற நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டும் - அமல்படுத்தப்படும். இப்பாதையில் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு - பின்னர் ஒரு தேதியில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு குழுவின் கூட்டத்தில் - இதர வாகனங்களுக்கும் இப்பாதையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம்.
2) பெரிய நெசவு தெரு நுழைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதர இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளையும் நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்த வேண்டும்.
3) மாற்று பாதையாக பொதுமக்களில் ஒரு பகுதியினரால் பரிந்துரைக்கப்பட்ட நீரோடை பாதையில் வருங்காலங்களில் சாலை அமைத்து - பஜார் மற்றும் இதர சாலைகளின் போக்குவரத்தினை குறைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும்
இவ்வாறு அவ்வாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
|