தன்னை அரசியலுக்கு அழைப்பு விடுத்து இயங்கும் இளைஞர்கள் இயக்கங்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வீடியோ வடிவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும் 6 நிமிட வீடியோ, சகாயத்தை அரசியலுக்கு அழைத்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சகாயம் கூறியிருப்பது (வீடியோ பதிவை காண இங்கு சொடுக்குக):
"நானே உங்களோடு இத்தகைய பணிகள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.. நன்றி!
"கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனை ஒட்டி ஆதரவு திரட்டும் வகையில் பேரணி நடத்துகிறார்கள், கூட்டங்களை எல்லாம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய வருகிறேன்.
இளைஞர்களுடைய இந்த வேட்கை, ஆதரவு திரட்டக்கூடிய இந்த முயற்சி அவர்கள் என் மீது அளப்பறிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் தமிழ்நாட்டை, தமிழ் சமூகத்தை உலமாற நேசிக்கிறார்கள் என்பதற்கு இது சான்றாக அமைகின்றன என்று தான் நான் கருதுகிறேன். எனவே, இந்த முயற்சிகளை மேற்கொள்ள கூடிய இந்த இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், நீங்கள் விரும்பக்கூடிய இந்த அரசியலில் நேர்மை, தூய்மை, அரசு நிர்வாகங்களில் ஊழலற்ற தன்மை இவைகளை உருவாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உயர்வானதுதான்.
ஆனால், நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த அரசியல் என்பது சமூகத்தின் உடைய ஓர் அம்சமாக, ஓர் அங்கமாக பார்க்க வேண்டும். இன்றைக்கு அரசியலிலே நேர்மை இல்லை, தூய்மை இல்லை என்று சொல்லக்கூடிய நாம் சமூகத்தின் உடைய பிற தலங்களிலே நேர்மையின்மை, உண்மையின்மை புறையோடி போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே, அரசியலில் நேர்மையை கொண்டு வர வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் தொடங்க வேண்டிய இடம் சமூகத்தில் இருந்துதான் என்று நான் கருதுகிறேன்.
சமூகத்தில் நாம் ஒரு நேர்மை விழிப்புணர்வை உருவாக்கி, ஒரு தூய நேர்மையான சமூகத்தை கொண்டு வருவோமானால் நேர்மையான அரசியலை கொண்டு வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன்.
எனவே, அன்புக்குரிய இளைஞர்களே.. இந்த தேர்தல் அரசியலைத் தாண்டி சமூகத்தை நோக்கி சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இன்றைக்கு நான் வேண்டுவது நீங்கள் உங்களுடைய அந்த அளப்பரிய ஆற்றலை சக்தியை அறிவை நம்முடைய சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் உங்களை நான் சமூக பணிகளிலே ஈடுபடுத்த ஆசைப்படுகிறேன். தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, லட்சகணக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம், பாதுகாக்கலாம். இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகளுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய ஏரி, குளங்களை நாம் பாதுகாத்திடலாம், வழிப்படுத்தலாம். நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நதிகள் அவை போற்றப்படக்கூடிய பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்கள். அவைகளை நாம் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளிலே ஈடுபடலாம்.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை நாம் தடுக்க முடியும். அதைப்பற்றிய விழிப்புணர்வை நாம் சமூகத்திலே ஏற்படுத்திடலாம். இன்றைக்கு விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கூடிய விவசாய பெருமக்கள் வாழ்வில் வறுமையும், வெறுமையும் நிரம்பி இருக்கிறது. அவர்களுக்கு படித்த நாம், படித்த அளப்பறிய ஆற்றல் கொண்டிருக்க கூடிய நாம் அவர்களுக்கு உதவ எத்தனிக்கலாம். நெசவாளர்களுடைய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட கிராம கை விளைஞர்களுக்கு எல்லாம் நாம் கரம் நீட்டலாம். கருணை காட்டலாம். அதே போல மாற்றுத் திறனாளிகளுக்கு, திருநங்கைகளுக்கு அவர்களுடைய மேம்பாட்டிற்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்.
அதே போல பேரிடர், இயற்கை சீற்றங்கள் இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ முன்வரலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் நம்முடைய ஊரக பகுதிகளிலே இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகள், தமிழ் வழியிலே படிக்க கூடிய மாணவ செல்வங்கள், பள்ளிக் குழந்தைகளுடைய ஆங்கில ஆற்றலை விஞ்ஞான ஆற்றலை மேம்படுத்த படித்த நாம் அவர்களுக்கு உதவிடலாம், வழிகாட்டலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே, ஆக்கபூர்வமான சட்டத்திற்கு உட்பட்ட இத்தகைய சமூக பணிகளிலே நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். எனவே தேர்தலைத் தாண்டிய, தேர்தல் அரசியலைத் தாண்டிய இத்தகைய ஆக்கப்பூர்வமான சமூக பணிகளை நீங்கள் செய்கிற பொழுது இந்த சமூகம் ஒரு மேம்பட்ட சமூகமாக மாறும். ஏன் இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கண்ணியமான தேர்தலை நடத்த நேர்மையான தேர்தலை நடத்த எத்தனிக்கிறது. எனவே அத்தகைய தேர்தலில் நம்முடைய ஆயிரக்கணக்கான் இளைஞர்கள், நம்முடைய வாக்காளர் பெருமக்கள் நேர்மையோடு வாக்களிக்க எந்த அரசியல் கட்சியினரிடமும் லஞ்சம் வாங்காமல் வாக்களிக்க நாம் ஒரு பெரிய பரப்புரையை விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திவிட முடியும்.
ஏன் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் கூட உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அந்த விழிப்புணர்வை இந்த சமூகத்தில் உங்களால் கொண்டுவர முடியும். இப்படி நீங்கள் இந்த சமூகத்தை நோக்கி பாடுபடுகின்ற பொழுது, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பொழுது இந்த தமிழ் சமூகம் ஒரு மேம்பட்ட சமூகமாக மாறும். மேம்பட்ட ஒரு நேர்மையான சமூகம், ஒரு நேர்மையான அரசியலை கொண்டு வர முடியும்.
எனவே, அன்பிற்குரிய இளைஞர்களே உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்வது இத்தகைய ஆக்கப்பூர்வமான சமூகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ செயல்படலாம். உங்களுடைய இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு துணையாக நான் இருப்பேன். நானே உங்களோடு இத்தகைய பணிகள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.. நன்றி!"
இவ்வாறு சகாயம் கூறியுள்ளார்.
தகவல்:
தி இந்து |