இந்தியாவின் 67ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று காலை 09.30 மணிக்கு குடியரசு நாள் விழா நடைபெற்றது.
கொடியேற்றம்:
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகராட்சி மேலாளர் அனைவரையும் வரவேற்றார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.
வாழ்த்துரை:
நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஜெ.அந்தோணி, கே.ஜமால் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
ஆணையர் உரை:
விழாவில் முன்னிலை வகித்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் நகராட்சி திட்டப் பணிகள் குறித்து உரையாற்றினார்.
பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட காயல்பட்டினத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியதில் பெருமைப்படுவதாகவும், இங்குள்ள மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள் என்றும், தன்னால் இயன்றளவு பணிகளைச் செய்துள்ளதாகவும், எஞ்சிய பருவத்திலும் தொடர்ந்து செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
நம் நாட்டை முன்னர் மன்னராட்சி என்ற பெயரில் மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து எது வெளிப்படுகிறதோ அதுவே ஒட்டுமொத்த நாட்டுக்கும் சட்டமாகக் கருதப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சி முறைகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் இந்நடைமுறை தொடராமல், மக்களாட்சியில் மக்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலமைப்புச் சட்டம் 1950இல் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், இது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும், மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டியவர்கள் குறுகிய நோக்குடனும், சுயநலமுடனும் செயல்பட்டு வருவதன் காரணமாக, மக்கள் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையாத நிலையே உள்ளது.
இந்நாட்டில் லஞ்ச - ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சி அமையும் நாள்தான் உண்மையான குடியரசு நாளாக இருக்கும்.
நம் நகராட்சியில் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று பரப்புரை செய்யப்பட்டாலும், நேர்மையான நிர்வாகத்தை முன்னோக்கி - இத்தனை போராட்டங்களுக்கிடையிலும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையால் சில இன்னும் நிறைவேறாமல் உள்ளன. எஞ்சியிருக்கும் சொற்ப காலங்களிலாவது அதிகாரிகள் முழு ஒத்துழைப்பளித்தால், இந்நகருக்குத் தேவையான அனைத்தையும் சிறப்புற செய்ய இயலும்.
உண்மையான குடியரசை இந்த நகராட்சியிலிருந்து - இந்த மாநிலத்திலிருந்து துவக்கி, நாட்டளவில் கொண்டு சேர்ப்போம். அப்படியொரு நாள் என்று வருகிறதோ அன்றுதான் உண்மையான குடியரசு நாளாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர்மன்றத் தலைவரது இந்த உரையின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
தேச ஒற்றுமைப் பாடல்:
பின்னர் அனைவரும் இணைந்து, மறைந்த கவிஞர் ‘காயல் பிறைக்கொடியான்’ எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் இயற்றிய தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலைப் பாடினர்.
நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெக்ஷ்மி, அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுள் சிலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும், நகர்மன்றத் தலைவர் இனிப்பு வழங்கினார்.
வண்ணக் கோலங்கள்:
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, நகராட்சியின் பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் இணைந்து - விழா நடைபெற்ற வளாகம் முழுக்க பல வண்ணங்களில் கோலங்களை வரைந்து அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (2015) காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|