சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக, கடந்தாண்டில் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, அதன் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், மன்ற அலுவலகத்தில், 15.01.2016. அன்று 19.45 மணி முதல் 21.10 மணி வரை நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் சோனா முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், 2016ஆம் ஆண்டின் இந்த முதலாவது செயற்குழுக் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற மன்றப் பணிகள் குறித்து விளக்கிப் பேசி, அவற்றுள் மெருகேற்றப்பட வேண்டிய அம்சங்களைப் பட்டியலிட்ட அவர், நடப்பாண்டு திட்டப் பணிகளை இன்னும் செம்மையாகச் செய்திட வேண்டும் என்று கூறினார்.
மன்றத்தின் 2016ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை, அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகளை திட்டமிட்ட படி நடைமுறைப்படுத்திட, உறுப்பினர் மாதச் சந்தா தொகை உரிய நேரத்தில் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கிப் பேசினார்.
செயலர் அறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள், அதில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்களின் நடப்பு நிலை குறித்து மன்றச் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் விளக்கிப் பேசினார்.
கல்வி உதவித்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை சமர்ப்பித்ததோடு, 2016ஆம் ஆண்டிற்கான சந்தா தொகைகளை உறுப்பினர்கள் செலுத்தத் துவங்கலாம் என்றும் கூறினார்.
கடந்தாண்டு பணிகள் - ஒரு மீள் பார்வை:
கடந்த 2015ஆம் ஆண்டில், நகர்நலப் பணிகள் உள்ளிட்ட மன்றப் பணிகளுக்காக 31 ஆயிரத்து 528 சிங்கப்பூர் டாலர் (14 லட்சத்து 80 ஆயிரம் இந்திய ரூபாய்) செலவிடப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டின் புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டு, நடப்பு 2016ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை ஆயத்தம் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
நடப்பாண்டில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள மன்றத்தின் திட்டப் பணிகள் குறித்த நன்மை - தீமைகள் குறித்து ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என உறுப்பினர் ராஸிக் கூறிய கருத்தை கூட்டம் ஏற்றுக்கொண்டது.
அடுத்து நடைபெறவுள்ள மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, மன்றத்தின் அனைத்து செயல்திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களின் பின்னூட்டத்தை (feedback) பெற்றிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பின்னூட்டப் படிவத்தை (feedback form) முஹம்மத் அப்துல் காதிர், வி.எஸ்.டீ.தாவூத் ஆகிய உறுப்பினர்கள் வடிவமைத்து அளிக்க பொறுப்பளிக்கப்பட்டனர். அடுத்த செயற்குழுக் கூட்டத்தில், பரிசீலனைக்குப் பின் அப்படிவம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
நடப்பு 2016ஆம் ஆண்டிற்கான - மன்றத்தின் உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை வசூல், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடத்த உத்தேசமாகத் திட்டமிடப்பட்டுள்ள 19.03.2016. அன்று செய்யப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதுடன், தேவையுடையோருக்கு உரிய உதவிகளை - உரிய காலத்தில் செய்திட இந்நிதியும் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்களுக்கு நிதியொதுக்கீடு:
நடப்பு 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் மருத்துவ உதவி வகைக்காக 1 லட்சம் ரூபாயும், கல்வி உதவித்தொகை வகைக்காக 50 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்ய கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது.
ஷிஃபா குறித்த நடப்புத் தகவல்:
கூட்டத்தின்போது தாயகத்திலிருந்த - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், தொலைதொடர்பு மூலம் கூட்டத்தில் பங்கேற்று, ஷிஃபா அமைப்பின் நடப்பு நிலவரம் குறித்து விளக்கிப் பேசியதுடன், அது குறித்த - உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
உள்ளூர் நலத்திட்டப் பணிகள்:
2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உள்ளூர் (சிங்கப்பூர்) நலத்திட்டப் பணியாக, சிங்கப்பூரிலுள்ள மழலையர் இல்லம் சென்று, அதன் தேவைகளைக் கேட்டறிந்து, இயன்ற உதவிகளைச் செய்திடலாம் என துணைத்தலைவர் திட்ட முன்வடிவைக் கூற, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
BBQவுடன் குடும்ப சங்கமம்:
மன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சியை, 30.01.2016. அன்று, சிங்கப்பூரிலுள்ள Pasir Ris பூங்காவில், BBQ Pit # 11, 12, 13 பகுதியில் நடத்திட தீர்மானிக்கப்பட்டு, ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஜவஹர் இஸ்மாஈல், ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல், சாளை நவாஸ் ஆகியோர் ஏற்பாட்டுக் குழுவினராக நியமிக்கப்பட்டனர். இதுகுறித்த இதர ஏற்பாட்டு விபரங்கள் குறித்து அனைவருக்கும் முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதர அம்சங்கள் & கருத்துப் பரிமாற்றம்:
இதர அம்சங்கள் குறித்து பின்வருமாறு கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன:-
மாதாந்திர செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று நடத்தலாம் என செயலாளர் முன்வைத்த கருத்தை கூட்டம் ஏற்றுக்கொண்டது.
சந்தா & நன்கொடைத் தொகை:
மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா மற்றும் நன்கொடை குறித்து, மன்றச் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் & கணக்குப் பொறுப்பாளர் எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ ஆகியோரிடம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, 19.03.2016. அன்று நடத்திட உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்விடம் தீர்மானிக்கப்பட்டதும், நிகழ்முறை விபரம் அறிவிக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிகள்:
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த திட்ட முன்வடிவை, அதற்கான குழுவின் தலைவர் எம்.எம்.அப்துல் காதிர் கூட்டத்தில் முன்வைத்தார்.
போட்டிகள் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் வழியே தெரிவிப்பார்.
உறுப்பினர்களிடையே இடைவெளியில்லாத தொடர்பைக் கட்டமைப்பதற்காக, ஒவ்வொரு காலாண்டிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ள நிவாரணக் குழுவுக்கு உதவி:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இயங்கி வரும் வெள்ள நிவாரண உதவி அமைப்பிற்கு 1 லட்சம் ரூபாய் அவ்வகைக்காக வழங்கப்பட்ட விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, உரிய நேரத்தில் தகுந்த உதவியைச் செய்த மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை, 12.02.2016. அன்று நடத்திட தீர்மானிக்கப்பட்டது. விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், நன்றியுரை, துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை கா.ந.மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |