காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 29, 2002 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 227]
செவ்வாய், ஐனவரி 29, 2002
காயல்பட்டணம் பேரூராட்சியில் அமளி – துமளி!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் பேரூராட்சியில் அமளி – துமளி
நிர்வாக அதிகாரி – கவுன்சிலர்கள் பயங்கர மோதல்
போலீசை வைத்துத் தான் இனி கூட்டம் நடத்த வேண்டும் - அதிகாரி
உங்கள் லட்சணமே அது தானே – கவுன்சிலர் கிண்டல்
காயல்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற கூட்டம் 24-01-2002 வியாழன் மாலை 4 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அ.வஹிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரி சு. இராமச்சந்திரனுக்கும் கவுன்சிலர்கள் காசிராஜன், காழி அலாவுத்தீன், செய்யது மொகுதூம், கலீல் ஆகியோருக்கும் பயங்கர வாக்குவாதம் நடைபெற்றது.
பொருள் எண் 8ல் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வண்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் 31-03-2002ல் முடிவடைவதால் நடப்பு ஆண்டிற்கு 10 சதவீதம் உயர்த்தி ஏற்கனவே எடுத்த பூந்தோட்டம் ஜெயசிங் என்பவருக்கே கொடுக்க வேண்டும் என கவுன்சிலர் எஸ்.ஐ. ரபீக் வலியுறுத்தினார்.
ஆனால், வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி தரும் இந்த கிணறு வெறும் முப்பதாயிரம் ரூபாய்க்கு மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள மோட்டாருக்கு மின்கட்டணமே 35இ000க்கு மேல் பேரூராட்சி கட்டியுள்ளது. எனவே 10 சதவீதம் உயர்த்தி கொடுத்தால் பேரூராட்சிக்கு என்ன லாபம்? பகிரங்க ஏலமே விடவேண்டும் லட்ச ரூபாய்க்கு மேல் ஏலம் கேட்க பலர் தயாராக இருப்பதாக கவுன்சிலர்கள் செய்யது மொகுதூம், காழி அலாவுத்தீன் இருவரும் வாதிட்டனர். இறுதியில் பகிரங்க ஏலமே விடப்பட வேண்டும் என தலைவர் அ. வஹிதா முடிவு அறிவித்தார்.
பொருள் எண் 12ல், 28-12-2001, மற்றும் 10-01-2002 தேதிகளில் வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகள் பற்றிய விவாதம் எழுந்தது. குடிநீர் குழாய்கள் விரிவாக்கப் பணிகள், தார்சாலைகள் அமைத்தல், மயானத்தில் கிணறு மற்றும் எரிமேடை கூடாரம் அமைத்தல் போன்றவைகளுக்கு 9,19,323 ரூபாய்க்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதில் முறைப்படி பகிரங்க டெண்டர் விடாமல் நிர்வாக அதிகாரி அறையில் வைத்து சில உறுப்பினர்கள் பஞ்சாயத்து நடத்தி வேலைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி தலைவருக்கு தெரியாமல் முறைப்படி நடந்தது போல் டெண்டர் கவர் உடைக்க மட்டும் தலைவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். படித்த தலைவரே இந்த அளவு ஏமாற்றப்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தையே அவமானப்படுத்திய செயலாகும். எனவே இந்த டெண்டர்களை ரத்து செய்து விட்டு புதிய டெண்டர் விட வேண்டும் என கவுன்சிலர்கள் காழி அலாவுத்தீன், செய்யது மொகுதூம், கலீல், காசிராஜன் ஆகியோர் வாதிட்டனர். தலைவரும் இது பற்றிய வேதனைகளை வெளிப்படுத்தினார். இதில் நிர்வாக அதிகாரிக்கும் கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இனிமேல் இது போன்று கட்டப்பஞ்சாயத்து நடத்தி வேலைகள் ஒதுக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
பொருள் எண் 14ல் பதிய வீட்டு குடிநீர் இணைப்புக்கள் 500 வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேட்டு தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை நிர்வாக அதிகாரியால் வைக்கப்பட்டது. உடனே எழுந்த கவுன்சிலர் காழி அலாவுத்தீன் எத்தனை இணைப்புக்கள் இப்போது கைவசம் உள்ளன என கேட்டார். உடனே உறுப்பினர் செய்யது மொகுதூம் எழுந்து வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பணபேரத்தில் இணைப்பு கொடுப்பது எப்படி என கேட்டார். இணைப்பு இல்லை என நாளைக்கே போர்டு எழுதி வைப்பதாக நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார். பேரூராட்சி அனுமதி இல்லாமல் இணைப்பே ஓடவில்லையா என கவுன்சிலர்கள் கேட்ட போது, கவுன்சிலர்கள் தான் அப்படி லைன்கள் போடுகிறார்கள் என நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார். உடனே ஆவேசமாக எழுந்த கவுன்சிலர் காசிராஜன் நிர்வாக அதிகாரியை நோக்கி, உங்கள் வீட்டில் தான் சட்டவிரோதமாக இரண்டு இணைப்புக்கள் உள்ளன. அதில் ஒன்றில் மோட்டாரும் உள்ளது. குறைந்த பட்சம் அந்த மோட்டாரையாவது துண்டியுங்கள் என்றார். உடனே நிர்வாக அதிகாரி, கிணற்று நீரை எடுப்பதற்கே மோட்டாரை வைத்துள்ளேன் என்றார். உடனே காசிராஜன் இப்போதே பார்ப்போமா என அழைத்தார். இப்படியெல்லாம் பேசினால் போலீசை வைத்து தான் அடுத்த கூட்டங்களை நடத்தவேண்டியதிருக்கும் என்றார். உங்கள் லட்சணமே அது தான். முன்பு வேலை பார்த்த ஆறுமுகனேரி நாசரேத்திலும் அப்படித்தான் கூட்டம் நடத்தினீர்கள் என்று காசிராஜன் கூறினார். இதைத் தொடர்ந்து நிர்வாக அதிகாரிக்கும் காசிராஜனுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கவுன்சிலர் ளு.யு. காதிரி குறுக்கிட்டு உங்கள் குடும்ப பகையை இங்கு வெளிப்படுத்த வேண்டாம் என காசிராஜனைப் பார்த்து கூறினார். துணைத்தலைவர் எம்.என். சொளுக்கு காசிராஜனை அமர வற்புறுத்தினார். ஆயினும் மோதல் நிற்கவில்லை. உச்சகட்டமான ஒன்றரை ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புகளை திருடி இதே பஞ்சாயத்தில் சஸ்பென்ட் ஆனவர் தானே நீர் என்று நிர்வாக அதிகாரியை பார்த்து காசிராஜன் கூறியதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
பேரூராட்சி ஊழியர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணைத்தொகையை நிர்வாக அதிகாரி சம்பளத்தில் பிடித்தம் செய்கிறார். ஆனால் அத்தொகையை வங்கிக்கு செலுத்துவதில்லை இதனால் ஊழியர்களுக்கு வட்டி சுமை ஏறுகிறது. வங்கிகளும் எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளன. இது மிகப்பெரிய மோசடி என காசிராஜன் கூறினார். இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம். என் இஷ்டப்படி தான் நடக்கும் என நிர்வாக அதிகாரி கூறினார். இதைத் தொடர்ந்தும் கூச்சல் குழப்பம் நீடித்தது. நிர்வாக அதிகாரியும் கவுன்சிலரும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தினர். இந்த மோதல் கதிரவன் மற்றும் அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக இடம் பெற்றுள்ளன.
|