தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் கைதிகளாக சிறைகளிலிருப்போரை விடுதலை செய்யுமாறு, எஸ்.டி.பீ.ஐ. மாநில செயற்குழுக் கூட்டத்தில் கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் இன்று (பிப்.14) நடைபெற்றது.
SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா அனைவரையும் வரவேற்றார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்சர் பாஷா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கட்சியின் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, தேர்தலில் போட்டியிடுவதற்கான தயாரிப்புகள், போட்டியிட வேண்டிய தொகுதிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் முகம்மது முபாரக் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில செயலாளர் உஸ்மான் கான் நன்றியுரை ஆற்றினார்.
மாநில செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறை கைதிகள் கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. ஆயுள் தண்டனை கைதிகளை குறிப்பிட்ட ஆண்டுகள் தனிமைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்வதை கடந்த காலங்களில் தமிழக அரசு வழமையாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஆயுள் சிறை தண்டனை கைதிகளை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. அபுதாஹிர் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழக முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையும் கனவாகவே தொடர்கிறது.
ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அரசியல் சாசன சட்டம் உறுபு 161 மாநில அரசுக்கு அதிகாரம் தருகிறது. எனவே இதை பயன்படுத்தி மேற்கண்ட கைதிகள் உட்பட 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறை கைதிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசை இச்செயற்குழு கோருகிறது.
2. தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் சுமத்தப்பட்டால் அதுகுறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்து வரும் சூழ்நிலையில், தற்போது கீழ் நிலையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அதனை நீட்டித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை, அரசு நிர்வாகத்தில் லஞ்சமும், ஊழலும் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
3. மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ந் தேதியன்று 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரி சலுகையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மருந்துகளின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மத்திய தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பேரிடியாக அமையும் என்பதால் மத்திய அரசு உடனடியாக இத்தகைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4. சமீபத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு, திட்டமிடாத நகர விரிவாக்கம் மற்றும் நீர் நிலைகள் அருகே மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளும் முக்கிய காரணங்களாக அமைந்தது. பிற மாநிலங்களில் உள்ளது போல் நீர் நிலைகள் அருகே 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டிடமும் கட்டக் கூடாது என்கிற விதிமுறை ஏற்படுத்தப்பட்டு, அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்த தேவையான விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
5. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் தொடர்ச்சியாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து, ஒட்டுமொத்த சமூகத்தை குற்றப் பரம்பரையாக்க காவல் துறையில் உள்ள சில கருப்பாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக இவ்விசயத்தில் நேரடி கவனம் செலுத்தி அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதோடு தவறு இழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.
6. தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் மற்றும் தொகுதி இவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில நிர்வாக குழுவிற்கு இச்செயற்குழு வழங்குகிறது.
7. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக் குழுவை நியமிக்க இச்செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|