காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 17, 2008 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1568]
ஞாயிறு, பிப்ரவரி 17, 2008
கஸ்டம்ஸ் சாலையை செப்பனிடுக! ஐ.ஐ.எம். (புகைப்படங்களுடன்)
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டணம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதிலிருந்து துவங்கி, கடற்கரையில் முடியும் காயல்பட்டணம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை போக்குவரத்திற்கு சிறிதும் தகுதியில்லாத நிலையில் உள்ளது. கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாகவே காட்சிதரும் இச்சாலையைச் சீரமைத்திடக் கோரி, பலரும் பலவகைகளிலும் முயற்சி செய்தவண்ணம் உள்ளனர்.
அந்த அடிப்படையில், காயல்பட்டணம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அமைப்பின் மூலம் காயல்பட்டணம் நகர்மன்றத் தலைவருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நமது ஊர் ஸீ கஸ்டம்ஸ் சாலையில் ஆஸாத் தெரு மற்றும் அப்பாபள்ளித் தெரு - இதற்கு இடைப்பட்ட தூரத்தில் அமைந்துள்ள சாலை மிகவும் பழுதடைந்து நடக்கக்கூட தகுதி இல்லாத நிலையிலுள்ளது. பேருந்து உள்பட போக்குவரத்து மிகுதியாக உள்ள இந்த இடத்தில் ஒதுங்கக்கூட முடியாத அவல நிலை கடந்த சில ஆண்டுகளாக இருப்பதை அறியாதவர் எவரும் இல்லை.
நமதூர் நகராட்சியில் பதவியில் இருப்பவர்களும், அதிகாரிகளும் அன்றாடம் உபயோகப்படுத்தும் சாலையாக இது இருக்கின்றது. மேற்படி சாலையை பழுது பார்த்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் நமது நகராட்சி 2005 முதல் இதுவரை இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது.
பள்ளிக்கூட பேருந்துகள் மட்டும் பயன்படுத்திவந்த இந்த சாலையில் கடந்த சில வருடங்களாக கடற்கரை வரை செல்லும் சிற்றுந்துகளும் அதிகம் வந்து செல்கின்றன. மேலும் கடற்கரை அழகுபடுத்தும் திட்டம்(!!!) வந்த நாள் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதன் விளைவு, இந்த சாலை மிகுதியான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக முந்தைய வருடங்களில் மழைக்காலங்களில் மட்டும் சேதமாக காட்சியளித்த இந்த சாலை, தற்போது வருடமுழுவதும் மேடு பள்ளங்களுடன் போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலையாக மாறிவிட்டது.
மேலும் எல்.கே. தொடக்கப்பள்ளிக்கருகில் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்களும், ஏற்கனவே குறுகியதாக இருக்கும் இந்த பகுதியின் போக்குவரத்திற்கு இடையூறு சேர்ப்பவர்களாக இருக்கிறார்கள். அழுகிய பழங்களும், காய்கறிகளும் சாலைகளில் எறியப்படுவதோடு தொடக்கப்பள்ளியின் மதில் சுவரோரம் சேர்த்து வைக்கப்படுகின்றன. மழையின் காரணமாக தேங்கியிருக்கும் நீர் மற்றும் சேற்றின் துணையோடு, இந்த அழுகிய உணவு வகைகளும் மேலும் நோய்கள் பரவுவதற்கு உதவுகின்றன.
சுனாமி காலத்தில் நீர் வடிவதற்காக கொச்சியார் தெருவைத்தாண்டி கடற்கரை செல்லும் சாலையில் வெட்டப்பட்ட பகுதி, மீண்டும் சீர் செய்யப்படாததால், அந்த பகுதியும் செப்பனிடப்படவேண்டியதுள்ளது.
இன்னும் அல்-ஜாமிவுல் அஸ்ஹர் பள்ளியின் முன்பாக அதிகமாகவும், குருவித்துறைப் பள்ளியின் முன்பு சிறிதளவும் இந்த சாலையில் சேதங்கள் காணப்படுகின்றன.
இந்த சாலையின் அவலநிலை சம்பந்தமாக 2005-ம் ஆண்டு சமூகநலத்தில் அக்கறை கொண்ட சிலர் முந்தைய நகராட்சி தலைவி அவர்களுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த சாலை மேலும் பழுதடைந்து மனித பயன்பாட்டிலிருந்து நீக்கவேண்டிய நிலையில் இருக்கின்றதை தங்களுக்கு தெரிவிக்கும் கடமையை நாங்கள் ஏற்றதன் விளைவுதான் இந்த மடல். தங்களின் ஆட்சிக் காலத்திலாவது இதற்கு ஒரு முறையான நடவடிக்கையை உடனடியாக எடுத்து, இந்நிலையை மாற்றுவதற்கு வேண்டிய ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
-இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுவுடன் காயல்பட்டணம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் நடப்பு புகைப்படக் காட்சிகளும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இம்மனுவின் நகல் ஒன்று காயல்பட்டணம் நகர்மன்ற நிர்வாக அதிகாரியின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் தற்போதைய நிலையை விளக்கும் புகைப்படங்களை கீழே காணலாம்:-
கடைப்பள்ளி பிரதான வாசலின் எதிரில் - மழை நேரத்தில் இது மரணக்கிணறாக மாறும்!
கடைப்பள்ளி வணிக வளாகத்தை ஒட்டிய பகுதி - வாகன ஓட்டிகள் அடிக்கடி அடிபடும் இடம்!
சித்தன் தெரு முனை - சிறுமழையெனினும் சேறும், சகதியும்தான்!
பெண்கள் பள்ளியின் மதில் சுவர் பகுதி - நொடிப்பொழுதில் வெண்ணிற ஆடை செந்நிறமாகும்!
எல். கே. தொடக்கப்பள்ளியின் மதில் சுவர் - எதிரில் வாகனம் வந்தால் எல்லாமே சேறுதான்!
நடைபாதை வியாபாரிகளும், அவர்களினால் ஏற்படும் சுகாதார கேடுகளும் - சுத்தம் ஈ:மானில் பாதிதானே...?
இப்புகைப்படங்கள் அனைத்தும் 11.02.2008 அன்று காலை 07:30 மணிக்கு எடுக்கப்பட்டவை!
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
பி.எம்.ஹுசைன் நூருத்தீன்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டணம்.
|