காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 16, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3938]
செவ்வாய், பிப்ரவரி 16, 2010
தோண்டாமல் புதிய சாலை: கொச்சியார் தெரு மக்கள் கொதிப்பு! முற்றுகை எச்சரிக்கை!!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், அப்பாபள்ளித் தெருவிலிருந்து கடற்கரை வரை புதிய சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பழைய சாலைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே அதன் மேல் புதிய சாலைகளை மேலும் மேலும் அமைப்பதன் காரணமாக, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பெரும் தொகை செலவழித்து கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள் பூமிக்குள் புதையுண்டு வருவதாகக் கூறி, காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த பொதுமக்கள் இந்த புதிய சாலை போடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அத்தெருவைச் சார்ந்த எஸ்.அப்துல் வாஹித் மற்றும் எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோர் நேற்றிரவு (15.02.2010) 7 மணியளவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்குச் சென்று, பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸிடம் இதுகுறித்து முறையிட்டனர்.
கொச்சியார் தெரு, நகரிலேயே மிகவும் தாழ்மட்டத்தில் இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கத்தால் மற்ற தெருக்களை விட இத்தெருவே அதிகம் பாதிக்கப்படுவதாகவும்,
மழை நேர நீர்த்தேக்கம் காரணமாக, மாதக்கணக்கில் இத்தெரு மக்கள் தங்கள் பக்கத்து வீட்டினரைக் கூட சந்திக்க முடியாத அளவுக்கு அல்லலுறுவதாகவும்,
அனைத்து வீடுகளின் கழிப்பறைகளிலும் மழை நேரங்களில் அசிங்கங்கள் மிதந்து, சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலைத் தருவதாகவும் ஐக்கியப் பேரவை தலைவரிடம் தெரிவித்துள்ள அவர்கள், தற்போது ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் தோண்டப்படாமல் புதிய சாலையை அமைப்பதால் தங்களுக்கு இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்படும் எனவும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்எஸ்.எம்.முத்து ஹாஜி, கவுரவ ஆலோசகர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் எஸ்.கே., செயற்குழு உறுப்பினர் கைலானீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் மனித நீதிப்பாசறை மாவட்டத் தலைவர் மொகுதூம் நெய்னா ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில், தங்கள் கோரிக்கைகளை நகர்மன்ற அதிகாரிகளுக்கு முறைப்படி சமர்ப்பிக்கவுள்ளதாகவும், தங்கள் கோரிக்கைப்படி பழைய சாலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சாலை போடப்படாவிட்டால், புதிய சாலைப்பணிகள் நடைபெறும் இடத்தில், தமது தெரு மக்கள் அனைவரையும் திரட்டி, முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினர்.
|