தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியை திங்கள்கிழமை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கருணாநிதியுடன் பேசினேன். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். இந்த கூட்டணி இன்று மட்டுமல்ல நாளையும் தொடரும்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமையும். ஜனநாயகம், சமயசார்பற்ற சமூக நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகளை பேசும் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற வேண்டும். இப்போது காங்கிரஸ் கூட்டணிக்கு வந்துள்ளது. மேலும் பல கட்சிகள் வர வேண்டும். அதேபோன்று, தே.மு.தி.க. வும் வந்தால் நாங்கள் பாராட்டுவோம், வரவேற்போம்.
தி.மு.க., முஸ்லிம் லீக் மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கின்ற கட்சிகளுக்கும் சேர்த்து 12 முஸ்லிம்கள் இடம் பெறும் வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுதான் சமுதாய வாக்குகள் முழுவதுமாக கிடைக்கும் என்றும் தெரி வித்தோம்.
புதுவையிலும் 30 தொகுதி களில் இதேபோல 3 தொகுதிகளை முஸ்லிம்கள் இடம் பெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்" என்றார்.
தகவல்:
தி இந்து |