ஜனவரி மாதம் 31 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள துஃபைல் வணிக வளாகத்தின் ஹனியா சிற்றரங்கில் எழுத்து மேடை மையம், தமிழ் நாட்டின் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது ஆற்றிய உரை இதோ:
’மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவல் பற்றிச் சொல்லும் முன் இதுபோன்ற இலக்கியச் சூழல் எப்படி உருவானது என்பதைப் பற்றியும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
இஸ்லாம் சமூகத்தின் பிரச்சினைகள் இலக்கியங்களாகப் பல இஸ்லாமிய இதழ்களின் மூலம் இதற்குமுன் வெளிவந்துள்ளன. அவை பொதுவான சமூக இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஆனாலும் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பொருட்டாக அவை கருதப்படவில்லை.
இஸ்லாமியச் சிறுகதைகள் பிரசுரமான பக்கங்களை அப்படியே புரட்டிவிட்டு அடுத்தடுத்த பக்கங்களில் உள்ள விஷயங்களையே படித்துப்போகும் மனநிலை நிலவியது.
தமிழ் இலக்கியச் சூழலிலிருந்த இந்த இறுக்கமான நிலையை மாற்றியதில் எனக்குப் பெரும் பங்குண்டு என்பதை இந்த அவையில் அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1983ஆம் ஆண்டு நான் எழுதிய ’தயவுசெய்து’ என்ற சிறுகதை ப. ஜீவானந்தம் தொடங்கிவைத்த “தாமரை” என்ற இதழில் வெளிவந்தது. அதுதான் நான் எழுதிய முதல் சிறுகதையாகும்.
அக்கதை வெளியானதுமே இலக்கியச் சிந்தனை விருதைப் பெற்றது. “இலக்கியச் சிந்தனை” அமைப்பு ப. இலட்சுமணன், ப. சிதம்பரம், பாரதி ஆகியோரின் ஆதரவில் நடைபெற்றுவந்த ஓர் அமைப்பு. தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளை மாதம்தோறும் நடக்கும் இலக்கிய அன்பர்களின் கூட்டத்தில் ஆய்வு செய்வார்கள். அதிலிருந்து ஒரு கதையை அந்தந்த மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவார்கள்.
1983ஜூன் மாதம் வெளியான என் கதையான ’தயவு செய்து’ அம்மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனாலும் எனக்கு இந்தத் தகவல் தெரியாது. அவர்களும் என் முகவரியைத் ’தாமரை’ அலுவலகத்தில் கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் என் கைப்பிரதியை எப்படியோ தவற விட்டுவிட்டதால், என் முகவரியைப் பெறமுடியாமல் போய்விட்ட்து.
இப்படியாக அந்தந்த ஆண்டின் 12 மாதங்களுக்கும் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தபின் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்படும். பரிசீலனைக்குச் சென்ற 12 சிறுகதைகளையும் ஆய்வு செய்து 1983ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக என்னுடைய ‘தயவுசெய்து’ கதையைத் தேர்ந்தெடுத்தவர் தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான திரு. நீல பத்மநாபன்.
அதுவரையிலும் வேறு கதைகளையும் நான் எழுதியிருக்காத சூழலில் நான் யாரென்றே அறியப்படாத சூழலில் என்னைக் கண்டுபிடிக்க இலக்கியச் சிந்தனை அமைப்பு முனைந்தது. ஏனெனில் அந்தச் சிறுகதைக்கான விருதை ஆண்டுதோறும் ஏ.வி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் விழா நடத்தி வழங்குவது இலக்கியச் சிந்தனையின் பணி.
வல்லிக்கண்ணன், தி.க.சி. ஆகியோரின் துணையால் நான் நெல்லை மாவட்டம் களக்காட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற புரிதலில் இலக்கியச் சிந்தனை சார்பில் இருவர் களக்காடு வந்தார்கள். அப்போதும் என்னைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில் எனக்கு ஒரு கட்டத்தில் ஆசிரியராக இருந்த, ஆனால் என்னை அறியாத ஆசிரியர் திரு.பீர்முகைதீன் அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றனர்.
அவரும் அவரின் மனைவியும் இதில் மிகவும் அக்கறை செலுத்திப் பல்வேறு நபர்களிடம் விசாரித்தவர்களாக இறுதியில் என் மைத்துனரிடமே விசாரிக்க நேர்ந்ததில் என்னைக் கண்டறிந்தார்கள். சந்தேகமே இல்லாமல் சொல்வேன், இந்தச் சூழலுக்கு அப்புறம்தான் இஸ்லாமியச் சிறுகதைகள் கவனிக்கப்பட்டன.
இதற்கு முன் வாசிக்காமல் கைவிட்டுச்சென்றது மாதிரியோ, அல்லது வாசித்தும் பொருட்படுத்தாமல் சென்றதுமாதிரியோ அதன்பின் நிகழவில்லை. 1986இல் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ நாவலைத் தோப்பில் முகம்மது மீரான் எழுதியதும் அது பரபரவென்று தமிழ் இலக்கியவுலகைக் கலக்கிற்று. அந்நாவல் குறித்து எழுதாத பத்திரிகைகள் இல்லை.
இவ்வாறாகத்தான் தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியப் படைப்புகளின் இடம் வலுப்பெற்றது. இப்போது பலப்பல நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று சூழல் வெகுவாக மாறிவிட்ட்து. இந்தச் சூழல் மாற்றத்தின் அடுத்த நகர்வுதான் மௌனத்தின் சாட்சியங்கள் நாவலின் வரவு.
இந்த நாவல் கோவைக் குண்டுவெடிப்பின் கலவர நிகழ்வுகளை விலாவாரியாகச் சொல்ல முயற்சி செய்கிறது. இது ஒரு இலக்கியக் கூட்டமல்ல. அப்படியிருந்திருந்தால் நான் இந்த நாவலின் விமர்சகனாக இருந்திருப்பேன். ஆனால் இது ஓர் அறிமுகக் கூட்டம். இத்தருணத்தில் இதன் இலக்கிய மதிப்புகளைப் பேசாமல், இந்த நாவல் இன்றைய நமது வகுப்புவாதச் சூழலில் என்ன திறப்பை உண்டாக்குகிறது என்பதைக் கவனப்படுத்தவே விரும்புகிறேன்.
கோவைக் கலவரங்கள் உண்டாக்கிய வேதனைகள், திசை திருப்பல்கள், வகுப்புவாத உக்கிரங்கள் ஆகியன இந்த நாவலில் ஆதாரபூர்வமான முறையில் சொல்லப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்காக இஸ்லாமியக் கட்சிகள் இருப்பதை விரும்பினோம். இதர கட்சிகளிலும் முஸ்லிம்கள் அப்போது பங்குபெற்றிருந்தார்கள். ஆனால் இளைஞர்கள் இஸ்லாமியக் கட்சிகளின்மீது அதிருப்திகொண்டிருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு தீவிரமான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் உருவாயின. இப்போது இஸ்லாமிய இளைஞர்கள் முஸ்லிம் அமைப்புகளில் மட்டுமே பங்கு பெறக்கூடியவர்களானார்கள். மற்றக் கட்சிகளில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் குறையலாயின. இந்த தருணத்தை இந்நாவல் கேள்வி கேட்பது முக்கியமான விஷயம். நாவலை வாசித்து முடிக்கும்போது மேலும்மேலும் நமக்குப் பல புரிதல்கள் உருவாகக்கூடும்.
சம்சுதீன் ஹீராவின் ”மௌனத்தின் சாட்சியங்கள்” நாவல் பற்றி :
இந்த நாவல் இதுவரை எழுதப்படாத கோவைக் கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் பற்றியது. மூன்றாவது எழுத்தியக்கமாக காலச்சுவடு கண்ணனால் விவரிக்கப்பட்டது இஸ்லாமிய எழுத்தியக்கம்.
அதன் மற்றொரு முக்கிய அம்சமாகக் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் இந்நாவல் வெளிவந்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.
இந்நூல் கோவைக் கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் குறித்து இதர ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள், கட்டுரைகள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நடத்திய விசாரணை அறிக்கைகள், நீதிபதி கோகுல கிருஷ்ணனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மேலும் பலரின் கருத்துகள் போன்ற எண்ணற்ற ஆவணங்கள் வெளிப்படுத்திய தகவல்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.
ஆதலால், இந்நாவல் வருங்காலத்தில் கோவை குண்டுவெடிப்புப் பற்றிய ஒரு முக்கியமான படைப்பு ஆவணமாக இருக்கும்.
கோவைக் கலவரங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு காவல்துறை நடத்திய படுகொலைகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தச் சுற்றெல்லைக்குள் இருந்து இந்த நாவலின் களம் விரிகிறது.
கோவையில் இரு வணிக சக்திகளின் போட்டி மனப்பான்மை இந்தக் கலவரங்களுக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்று. ஏற்கெனவே திராவிட இயக்கக் கருத்துகள், சுயமரியாதை உணர்வுகள் பெருகிய தமிழகத்தில் தங்களின் இயக்கத்தை வளர்க்க வேண்டுமென்றால் அதற்கு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குவது அவசியம் என்கிற எண்ணத்தோடு இந்துத்துவ தீவிரவாதிகள் களமிறங்கினார்கள்.
அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை வீச்சாகக் கொண்டுசெல்ல சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களைத் தூண்டினார்கள். இதன்மூலம் ஆதிக்கச் சாதியினர் தம்மையும் பாதுகாத்து, தம் ஆதிக்க உத்வேகத்திற்காக மதவாத உணர்வுகளையும் வளர்த்துக்கொள்ளத் துணை புரிந்தனர்.
நகரம் மதவாதச் சூழலின் அபாயக் கட்டத்துக்குள் திணிக்கப்பட்ட்து. இதனை ஏன் காவல்துறை கண்காணிக்கவில்லை? உண்மையில் காவல்துறை நாட்டில் குற்றங்கள் களையப்பட வேண்டும் என்று விரும்புகிறதா அல்லது குற்றவாளிகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறதா? உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்த்து?
கோவையில் குண்டுகள் வெடித்தவுடன் தோன்றிய சூழ்நிலைகள் மட்டுமே அசாதாரணமானது அல்ல; உருவாக்கப்பட்ட கோஷங்கள், அதன்மூலம் சமூகத்தில் ஏற்படுத்த விழைந்த பிளவுகளும் முக்கியமானவை. குண்டுகள் வெடித்ததும் தன்னியல்பாகப் பாதுகாப்பான இடத்துக்கு ஓடித் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியவர்கள் எழுப்பிய கோஷம் முக்கியமானது : “முஸ்லிம்கள் குண்டு வெச்சுட்டாங்க; நம்மாளுங்க செத்துட்டாங்க”.
இரண்டாவது விஷயம், கலவர ஏற்பாடுகள். அவை ஏற்கெனவே பக்காவாகச் செய்யப்பட்டிருந்தன. கலவரங்களை உருவாக்கிய இந்துத்துவா சக்திகள் ஆங்காங்கே பயங்கரமான ஆயுதங்களை உருவி எடுத்தார்கள். அதாவது கலவரத்தை ஏற்படுத்தும்முகமாகப் போதுமான எச்சரிக்கை, முன் தயாரிப்புகளில் இந்தத் தீவிரவாதிகள் இருந்துள்ளனர். இந்த ஆயுதங்கள் எப்படி வழியெங்கும் பதுக்கப்பட்டன? அதற்கு யார் துணை?
கலவரங்களில் ஈடுபடுத்தப்பட்ட அருந்ததியர்கள் கலவரங்களில் கிடைக்கும் விலையுயர்ந்த ஜவுளிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இதர ஆடம்பர அல்லது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதே சமயம் இவர்களிலும் பலர் கைது செய்யப் பட்டிருந்தனர். இவர்களின் வழக்கை நடத்தத் தாங்கள் உதவத் தயார் என்று சொன்ன தீவிரவாதப் பொறுப்பாளர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதும், அடிக்கடிப் பார்க்க வராமல் இருந்ததுவும் அருந்ததிய இளைஞர்கள் சிலரைக் கோபப்படுத்தியிருந்தது. இவர்களின் ஆவேசத்தைத் திசை திருப்ப இந்துத்துவத் தீவிரவாத பொறுப்பாளர் ஒருவர், பலரின் முன்னிலையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் அறைவது முக்கியமான காட்சி; அரிய வகைத் தந்திரம்.
இருப்பினும் சூழ்நிலை மாற்றத்தால் அருந்ததிய இளைஞர்கள் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக மாறுகிறார்கள். முஸ்லிம்களின்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த வரும் இந்துத்துவப் படையை வழிமறித்து அவர்களை விரட்டியடிக்கிறார்கள்.
குண்டுகள் வைத்து வெடிக்கச் செய்த குற்றவாளிகளை நோக்கி நகராத காவல்துறை, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று தேசவிரோத வழக்குகளில் சிக்க வைப்பதும், எவ்விதமான விசாரணைகள், ஆய்வுகளும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக இஸ்லாமியத் தீவிரவாதக் கருத்தாக்கத்தை உருவாக்குவதும் காவல்துறையால் நடத்தப்படுகிறது.
ஆனாலும் ஆங்காங்கே மனிதநேய உணர்வுகளோடு திகழும் காவல்துறையினரும் உண்டு. அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் உண்டு. அவர்களில் பலரும் தங்களின் சமயோசிதமான செயல்பாடுகளால் முஸ்லிம்களைக் காக்கிறார்கள். வன்முறைகளைப் பேசும் நாவல், அதே தடத்தில் நிகழ்ந்த மானுடநேயச் செயல்பாடுகளையும் குறிப்பிடத் தவறவில்லை.
நாவல் சமநிலையோடு எழுதப்பட்டுள்ளது. வெறுப்புணர்வையும் வன்முறையைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்ட முஸ்லிம்களின் தீவிரவாத அமைப்புகளையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். குண்டுகள் வெடித்து அப்பாவிகள் பலியாவதும், கொடூரமான முறையில் வதைக்கப்பட்ட வேறு பலர் முஸ்லிம்களின் மீது வன்மம் கொள்வதும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளன.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக விலாவாரியாக நாவலின் அதிதீவிர வன்முறைக் களங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இந்த நாவல் வெளிவர துணைநின்ற அனைவரின் பெயர்களையும் களந்தை பீர்முகம்மது வாசித்து, அவர்களுக்கு இந்தக் கூட்ட்த்தின் சார்பான நன்றிகளை வெளிப்படுத்தினார்.
|