எழுத்து மேடை மையத்தின் ஏற்பாட்டில் யாதும் ஆவணப்படம் திரையிடல் மற்றும் மௌனத்தின் சாட்சியங்கள் நூலாய்வு! பிரபல் எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது கலந்துக்கொண்டார்!!
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஆவணப்பட திரையிடல்களும் அதையொட்டிய விவாதங்களும் - நகரில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக - கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள துஃபைல் வணிக வளாகத்தின் ஹனியா சிற்றரங்கில் எழுத்து மேடை மையம், தமிழ் நாட்டின் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
துவக்கமாக - நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை எழுத்தாளரும் சமூக பணியாளருமான ஏ.தர்வேஷ் வரவேற்று நிகழ்ச்சி பற்றி எடுத்துரைத்தார்.
முதல் நிகழ்வாக முன்னணி ஆவணப்பட இயக்குநர் கோம்பை எஸ்.அன்வர் இயக்கிய “ யாதும் “ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் தமிழை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்களின் வேர்களையும் அவர்களின் பன்னாட்டு சமூக பண்பாட்டு வணிக உறவுகளையும் தொடர்புகளையும் தொட்டுக்காட்டும் விதமாக காட்சிகள் விரிந்தன.
தமிழகத்தில் வாழும் பல்வேறு சாதி குழுக்களோடும் சகோதர மத வழிபாட்டுத்தலங்களோடும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தோடும் தமிழ் முஸ்லிம்களுக்கு உள்ள மிக அன்னியோன்னியமான உறவானது பரவலாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா எழுதி பொன்னுலகம் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “மௌனத்தின் சாட்சியங்கள்” புதினத்தை மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
உரையின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் இலக்கியத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பை தனது சொந்த வாழ்க்கை பட்டறிவிலிருந்து பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மதை பற்றி அறிமுகப்படுத்தி ஏ.தர்வேஷ் பேசுகையில் , “ எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சார்ந்தவர். பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர். முன்னர் தமிழ் ஹிந்து நாளிதழில் பணியாற்றியவர். தற்சமயம் நாகர்கோவிலிலிருந்து வெளிவரும் தீவிர இலக்கிய மாத இதழான “காலச்சுவடு” இதழின் இணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்.
சிறுகதைகள் , நெடுங்கதைகள் , கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வரும் அன்னார் சுரண்டலற்ற ஒரு சமத்துவ சமூகத்திற்காக தொடர்ந்து உழைத்து வருபவர். நல்ல பண்பாளர் “ எனக் குறிப்பிட்டார்.
நண்பகல் 12:30 மணியளவில் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross