ஹாங்காங் நாட்டில் வசித்து வரும் சீனர் ஜாக் சின் (வயது 70). கனடா, ஹாங்காங் நாடுகளின் கல்வித் துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றியவர் இவர்.
ஹாங்காங் நாட்டிலுள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழர்களுக்கு சீன மொழியைக் கற்பது கடினமாக இருந்த காலச் சூழலில், தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துள்ள இவர், தாமாக முன்வந்து - அங்குள்ள ஹாங்காங் இளம் இந்திய நண்பர் குழு நடத்தும் மொழி வகுப்பில், தமிழர்களுக்கு சீன மொழியை தமிழ் வழியிலேயே கற்றுக் கொடுக்கிறார்.
சென்னையில் பிறந்து, தனது 19ஆவது வயது வரை சென்னையிலேயே வசித்தமையால், சீனப் பெற்றோருக்குப் பிறந்தவரான இவருக்கு தமிழ் மொழியுடன் நல்ல தொடர்பு உள்ளது.
தற்சமயம் பணி நிறைவு பெற்றுள்ள இவர், தான் வாழ்ந்த தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்த்து, தமிழ் மொழித்திறனை முழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் பயணப்பட்டு வந்துள்ளார். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வழியாக 09.02.2016. செவ்வாய்க்கிழமை மாலையில் காயல்பட்டினம் வந்தார்.
அவரையும், அவருடன் இணைந்து வந்திருந்த அவரது மனைவியையும் வரவேற்கும் வகையில், 19.00 மணியளவில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், ஹாங்காங் வாழ் காயலர்கள் சார்பாக - ஹாங்காங் YIFC Academy for Education & Enrichment அமைப்பின் ஒருங்கிணைப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் தைக்கா மஹ்மூத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். YIFC Academy for Education & Enrichment அமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவருமான அப்துல் அஜீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
YIFC Academy for Education & Enrichment அமைப்பின் துவக்கம் முதல் - இன்றளவிலான அதன் செயல்பாடுகள் குறித்தும், சிறப்பு விருந்தினர் குறித்துமான தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றன.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஹாங்காங் வாழ் காயலர்கள் சார்பில் எஸ்.எம்.உஸைர், ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பாளையம் அஹ்மத் முஸ்தஃபா, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் பி.எம்.ரஃபீக் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ஜாக் சின் உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் உரையாற்றத் துவங்கியபோது, அனைவரும் தமிழிலேயே பேசுமாறு வலியுறுத்தியதால் தூய தமிழில் உரையாற்றினார்.
பிறந்தது முதல் தனது 19 வயது வரை சென்னையிலேயே வசித்து வந்ததாகவும், சென்னையில் தான் பயின்ற பள்ளியில் இணைந்து பயின்ற மாணவர்களை சமூக ஊடகங்கள் உட்பட பல வகையிலும் அடையாளங்காண முயற்சித்தும் கைகூடவில்லை என்றும், சென்னையிலிருந்த காலத்தில் தான் படித்த பள்ளியில் ஆங்கிலத்திலேயே அனைவரும் பேசியதால் தமிழ் மொழி மீதுள்ள பற்று காரணமாக சாலையோரத்தில் வசிக்கும் குடும்பத்தினர், ரிக்ஷா ஓட்டுநர்கள் உள்ளிட்ட மக்களுடன் உரையாடியே இந்தளவுக்கேனும் தமிழில் பேசுவதாகவும், இன்னும் 5 மாத அவகாசம் கிடைத்தால் தன்னால் முழுமையாகத் தமிழ் பேச இயலும் என்றும் கூறினார்.
பங்கேற்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழில் பாரதியாரின் பாடலொன்றை உணர்வு பொங்கப் பாடி அனைவரின் கரவொலி பாராட்டைப் பெற்றார்.
உடல் நலன் குறித்துப் பேசிய அவர், வாழ்வின் முடிந்து போன கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நிச்சயமற்ற வருங்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிராமல், கிடைத்துள்ள நிகழ்காலத்தை ரசித்து வாழ்ந்தால் நோய்களின்றி, உற்சாகத்துடன் வாழ இயலும் என்றார்.
வாழ்நாள் முழுவதும் நம் உடலைத் தாங்கிச் செல்லும் கால்களின் நலன் தொடர்பாக மிகவும் அக்கறையற்றே இன்று பெரும்பான்மையோர் இருப்பதாகவும், அதன் நலனில் முழு அக்கறை செலுத்தினால்தான் - யாரையும் எதிர்பார்க்காமல் தற்சார்புடன் வாழ இயலும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், தமிழில் பேசத் தெரியாது என்று கூறிவிட்டு, இங்கிருக்கும் அனைவருக்கும் பாடம் நடத்தும் வகையில் அழகிய தமிழில் உரையாற்றிவிட்டதாக அவரைப் புகழ்ந்து பேசினார்.
இந்நிகழ்ச்சி நடைபெறும் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் இதற்கு முன் இந்தியாவின் பல பிரதமர், தமிழக முதலமைச்சர்கள் உட்பட முக்கியமானவர்கள் வந்து உரையாற்றிச் சென்றுள்ளதாகவும், எனினும் இதுபோன்றதொரு நிகழ்ச்சி இதுவரை நடைபெற்றதில்லை என்றும், இந்நிகழ்ச்சி போன்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் அது தம் வயதையொத்தவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
YIFC Academy for Education & Enrichment நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவருமான காழி அலாவுத்தீன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் வாழ் காயலர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தைக்கா உபைதுல்லாஹ் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
YIFC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|