காயல்பட்டினம் உள்பகுதியிலும், புறநகரிலும் இயங்கி வரும் பல்வேறு துவக்கப்பள்ளிகளுக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் காயல் நல மன்றங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சிந்தனை உதயம்:
காயல் நகர மக்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற சேவைகளை ஆற்றி வருகிறது பல்வேறு நாடுகளிலும் செயலாற்றி வரும் காயல் நல மன்றங்கள். கல்வி முன்னேற்றத்திற்கு, மருத்துவ சிகிச்சைக்கு, ஏழை - எளியோர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு என அதன் பட்டியல் தொடரும். இதற்கிடையில் கல்வித்துறையில் காயல் நகரிலுள்ள, குறிப்பாக புறநகர்ப் பகுதியிலுள்ள சகோதர சமுதாயத்திற்கும் உதவிக்கரம் நீட்டலாமே, அங்குள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியருக்கும், அவர்கள் கல்வி பயிலும் துவக்கப் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்திடலாமே என்று ரியாத் காயல் நல மன்றத்தின் கூட்டத்தில் ஆலோசித்து, இதனை இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைமுறைப்படுத்திட திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகரின் உள்ளே மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகத்தினர் நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகள் யாவற்றையும் கேட்டறிந்து அதன் அடிப்படையில் ''Kayal Primary Schools Welfare Projects'' என்றொரு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மங்களவாடி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஓடைக்கரை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அலியார் தெரு, அருள்ராஜு துவக்கப்பள்ளி, இரத்தினபுரி, தேசிய துவக்கப்பள்ளி, அருணாசலபுரம் ஆகிய பள்ளிகளுக்கு ரியாத் காயல் நல மன்றம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடப்பு கல்வியாண்டில் (2015-16) வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதர காயல் நல மன்றங்களும், சமூக ஆர்வலர்களும் இத்திட்டத்தில் இணைந்து பள்ளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிட முன்வந்துள்ளனர்.
அருணாச்சலபுரம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி:
காயல்பட்டினம் 01ஆவது வார்டு அருணாச்சலபுரத்திலுள்ள தேசிய துவக்கப்பள்ளியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், ரியாத் காயல் நல மன்றம் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் மற்றும் கத்தார் காயல் நல மன்றம் ஆகியவற்றின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த 28.01.2016. வியாழக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளித் தலைவர் எஸ்.பன்னீர் செல்வம் தலைமையுரையாற்ற, அவரைத் தொடர்ந்து, அருணாச்சலபுரம் வட்டாரத் தலைவர் டி.திருத்துவராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இருவரும் தமதுரையில், காயல்பட்டினத்தின் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர்களான எல்.கே.லெப்பைத்தம்பி என்ற எல்.கே. அப்பா, எம்.கே.டீ.முஹம்மத் அபூபக்கர் என்ற எம்.கே.டீ. அப்பா உள்ளிட்ட நகரப் பிரமுகர்கள் இப்பள்ளிக்கு உதவிகள் வழங்கியதை நினைவுகூர்ந்தும், அதே உதவிகள் தற்போதும் இஸ்லாமியப் பெருமக்களால் தொடர்வதாகவும், இஸ்லாம் வகுத்தளித்த அழகான நெறிமுறையே இந்த உதவும் மனப்பான்மைக்கு காரணம் என்றும் கூறினர்.
இந்தப் பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அமர்ந்திட அழகான, மிகவும் தரமான ஸ்டீல் பெஞ்ச் - டெஸ்க்குகள் அளித்து பிள்ளைகளின் மனதை குளிர்வித்துள்ளீர்கள். இந்த பள்ளியில் சில நிகழ்ச்சிகள் நடக்கும். பல பிரபலங்கள் வந்து செல்வார்கள். அவர்களெல்லாம் கூட இதுமாதிரியெல்லாம் உதவியதில்லை; சிந்தித்ததில்லை. ஆனால் நீங்களோ நாங்கள் கேட்காமலேயே எங்கள் பள்ளிக்கு வந்து, எங்களின் தேவைகளை கேட்டறிந்து உடனடியாக செய்தும் விட்டீர்கள் என்று கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலிவடைந்துள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடைபெற்று வரும் சூழலில், இந்தப் பள்ளிக் கூடமும் அதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடாமலிருக்க இதுபோன்ற உதவிகள் செய்திருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது என்றும், இந்த உதவிகளை தாங்கள் என்றும் மறக்கப் போவதில்லை என்றும், இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மனம் நெகிழ்ந்து பேசினர்.
அவர்களைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியை எம்.சுகந்தி பேசினார்.
''இவ்வளவு பெரிய உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் உங்களை நாடி எதுவும் கோரிக்கை வைக்காமலேயே, நீங்களாகவே வந்து எங்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அதையும் உடனடியாக செய்து தந்திருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. புதிய ஸ்டீல் பெஞ்ச் - டெஸ்க்குகள் பள்ளிக்கு வந்து இறங்கியதுமே மாணவ-மாணவிகள் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது மனதை விட்டு மாறாதது.
முன்பு இப்பள்ளியில் 250 மாணவ-மாணவியர்கள் பயின்று வந்தனர். தற்போது 70 மாணவ-மாணவியரே பயின்று வருகின்றனர். இதுபோன்ற நலத்திட்டங்கள் மூலம் மேலும் ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்திட வாய்ப்பு உள்ளது. பொருட்கள் யாவும் நன்றாக உள்ளது.இவை யாவற்றையும் அன்பளிப்புச் செய்த அமைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்'' என்றார்.
அடுத்து இக்ராஃ கல்விச் சங்க இணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
துவக்கமாக இக்ராஃ ஆற்றி வரும் சேவைகள் குறித்து விளக்கி விட்டு, அரசுப் பள்ளிகள் வாழ வேண்டியதன் அவசியம், அரசுப் பள்ளிகளில் மக்களைப் படிக்க வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.
மேலும் ''சிறிது முன்பு உரையாற்றியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். இங்கே கீழ்ஜாதி, மேல்ஜாதி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. நல்ல நடத்தை கொண்டவர்கள் உயர்ஜாதி, கெட்ட நடத்தை கொண்டவர்கள் கீழ்ஜாதி என்று வேண்டுமானால் பிரிக்கலாம். மற்றபடி நாம் எல்லோரும் சமமானவர்களே! எனவே தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம் என்று கூறினார்.
மேலும் காயல்பட்டினம் புறநகர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள், இனி வழங்கப்படவுள்ள உதவிகள் குறித்து அவர் பின்வருமாறு பேசினார்:-
>>> மங்களவாடி துவக்கப்பள்ளியில், அனைத்து மாணவ-மாணவியருக்கும் பள்ளிச் சீருடைகள், உணவுத் தட்டுகள், டம்ளர்கள், பாடக்குறிப்பேடுகள்...
>>> ஓடக்கரை துவக்கப்பள்ளிக்கு, தண்ணீர் சுத்திகரிப்பான் (water filter ), 01 - 02ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு காலணிகள்...
>>> அலியார் தெரு (கே.டீ.எம். தெரு) துவக்கப்பள்ளிக்கு, தண்ணீர் சுத்திகரிப்பான் (water filter) , 250 பாடக் குறிப்பேடுகள், பள்ளியின் சுற்றுச்சுவர் (compound wall) உயர்த்திக் கட்டுதல்...
>>> இரத்தினபுரி அருள்ராஜு துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவியருக்கு படங்களைக் காண்பித்து - பாடல், ஆங்கில பேச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றைப் பயிற்றுவிப்பதற்காக LED TV (32 inches), DVD , ஆசிரியர் மேஜை...
ஆகியன இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அருணாச்சலபுரம் தேசிய துவக்கப்பள்ளிக்கு ஏற்கனவே ரியாத் காயல் நல மன்றத்தின் மூலம் தண்ணீர் தேக்கத் தொட்டி(water tank) , தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்ப் செட் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீண்டும் ரியாத் காயல் நல மன்றத்தின் மூலம் 6 மின் விசிறிகள், ஐக்கிய ராஜ்ஜிய (UK) காயல் நல மன்றத்தின் மூலம் மாணவர்கள் அமர்ந்து பயில ஸ்டீல் பெஞ்ச் - டெஸ்க்குகள் 15, கத்தார் காயல் நல மன்றத்தின் மூலம் தண்ணீர் சுத்திகரிப்பான் (water filter) ஆகியன வழங்கப்படவுள்ளதாகக் கூறினார்.
இவ்வுதவிகள் அனைத்தும், சமயங்களால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், ஒரே ஊர் மக்கள் என்ற அடிப்படையில் மக்களிடையே நல்லிணக்கம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவரும், ஜித்தா காயல் நல மன்றத்தின் தலைவருமான குளம் எம்.ஏ.அஹமது முஹியித்தீன் பேசினார்.
உலக காயல் நல மன்றங்கள் ஆற்றி வரும் சேவைகள் குறித்தும், செயல்படும் விதங்கள் குறித்தும் விளக்கி, தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு தேவையானதை இக்ராஃ நிர்வாகியுடன் தொடர்பு கொண்டு எடுத்துரைக்குமாறும், எங்களால் இயன்ற வரை உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவோம் என்றும் கூறி முடித்தார்.
அதற்கடுத்து, இந்த ''துவக்கப் பள்ளிகளுக்கான நலத்திட்டங்களை'' உருவாக்கி, செயல்படுத்திய ரியாத் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் பீ.எம்.எஸ்.முஹம்மது லெப்பை பேசினார்.
இத்திட்டம் உருவாக்கப்பட்ட விதம் குறித்து விளக்கி விட்டு, ''இஸ்லாமிய சமுதாய மக்கள் மட்டுமின்றி சகோதர சமுதாய மக்களும் கல்வியில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேவையான மாணவர்கள் இல்லை; தேவையான வசதிகள் இல்லை எனக் காரணம் கூறி நலிந்த நிலையிலுள்ள இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டு விடக் கூடாது என்ற தூர நோக்குப் பார்வையோடும் சிந்திக்கப்பட்டு இந்த நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,தேவையான உதவிகள் வருடம் தோறும் தொடரும் என்றும், இங்கே பயிலும் மாணவ-மாணவியர் நன்றாக பயின்று முன்னேற்றம் அடைந்து நீங்களும் நாளை இது போன்று பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் செய்திட வேண்டும்'' என்றும் கூறி முடித்தார்.
அதனைத் தொடர்ந்து இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது பேசினார்.
இப்பள்ளியின் தலைமையாசிரியை நடப்புக் கல்வியாண்டிற்காக (2015-16) கேட்டுக் கொண்டவற்றில் பெரும்பாலான தேவைகள் / பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அனைத்துமே தரமானது என்றும், தற்போது புதிதாக வேண்டுகோள் வைத்துள்ள '' சேதமான தரைத்தளத்திற்கு சிமெண்ட் பூசி பள்ளிக் கட்டிட சுவர்களுக்கு வண்ணம் பூசுவது (white wash)'' கூடிய விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, வாய்ப்பிருப்பின் நடப்புக் கல்வியாண்டிலேயே (2015-16) செய்து தரப்படும் என்றும், அடுத்த கல்வியாண்டிற்கான தேவைகள் குறித்து பின்னர் விசாரித்து அதற்கான பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுமென்றும்'' கூறினார்.
மேலும் ''இதுவரை பல்வேறு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்திருந்தாலும், இது மாதிரி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது இல்லையென்றும், காரணம் இந்த உதவிகள் விளம்பரத்திற்காகவோ, பெருமைக்காகவோ வழங்கப்படுவதில்லை என்றும், எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய்மையான எண்ணத்தோடு சகோதர சமுதாயத்திற்கு செய்யப்படுவதாகவும் கூறிய இக்ராஃ நிர்வாகி, ''இவ்வளவு அதிகமான நலத்திட்ட உதவிகள் செய்யும்போது இதை ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து பெற வேண்டும் என்று பள்ளி நிர்வாகிகள் விரும்புவதாக தலைமையாசிரியர் வலியுறுத்திக் கூறியதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு தாம் ஒப்புக் கொண்டதாகவும், நேற்று தொலைபேசியில் பேசும்போது கூட சால்வை அணிவிப்பது குறித்து தலைமையாசிரியை கேட்டபோது, அதை நாங்கள் விரும்புவதில்லை; எனவே அதை தவிர்த்து நிகழ்ச்சியை மிகவும் எளிமையானதாக, 15 அல்லது 20 நிமிடத்தில் முடித்துக் கொள்ளவேண்டும் என தாம் தெரிவித்ததாகவும், ஆனால் அதையும் தாண்டி இங்கே வந்திருக்கும் பல அமைப்பினரையும் மிகுந்த மனமகிழ்வோடும், கண்ணியத்தோடும் கவுரவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பின்னர், பள்ளிக்கான நலத்திட்ட உதவிகளை, ரியாத் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் பீ.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை, முன்னிலை வகித்த இக்ராஃவின் துணைத்தலைவர் குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், இணைச் செயலாளர்களான என்.எஸ்.இ.மஹ்மூது, எஸ்.கே.ஸாலிஹ், மூத்த செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் வழங்க, பள்ளியின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியை மற்றும் இதர ஆசிரியையர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர், முன்னிலை வகித்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பள்ளியின் செயலாளர் சி.பீ.முத்தையா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் பொருளாளர் ஈணன் உட்பட ஆசிரியையர், பகுதி பிரமுகர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி மாலை 04:15 மணியளவில் நிறைவுற்றது.
இரத்தினபுரி அருள்ராஜு துவக்கப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்:
மேற்கண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக கடந்த 08-01-2016 வெள்ளிக் கிழமையன்று மதியம் இரத்தினபுரியிலுள்ள அருள்ராஜு துவக்கப் பள்ளிக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், ரியாத் காயல் நல மன்றத்தினால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அப்பள்ளி தலைமையாசிரியரால் கேட்கப்பட்ட, மாணவ-மாணவியருக்கு படங்களைக் காண்பித்து - பாடல், ஆங்கில பேச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றைப் பயிற்றுவிப்பதற்காக LED TV (32 inches), DVD , Steel Table (ஆசிரியர் மேஜை) ஆகியவற்றை ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் ஏ.ஹெச்.முஹம்மது நூஹு வழங்கினார்.இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் உடனிருந்தனர்.பள்ளித் தலைமையாசிரியை ஆசிரியர்கள் கூட்டத்திற்கு சென்றிருந்ததால், பொருட்களை பள்ளி நிர்வாகியும், ஆசிரியைகளும் பெற்றுக் கொண்டனர்.
அன்பளிப்புப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகியும், ஆசிரியைகளும், ''இவ்வளவு விரைவில் தாங்கள் எங்களுக்கான பொருட்களை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சிலர் சிறிய பொருளை கொடுத்து விட்டு பெரிதாக சொல்லிக் காட்டுவார்கள்.ஆனால் தாங்களோ எந்தவித ஆரவாரமுமின்றி பெரிய டிவியையும், இதர பொருட்களையும் காலம் தாழ்த்தாமல் வழங்கி உதவியுள்ளீர்கள்.எங்கள் பள்ளி மாணவ-மாணவியர்கள் டிவியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். இந்த அருமையான உதவியை செய்திட்ட உங்களுக்கு எங்கள் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
அலியார் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு உதவி:
நகரினுள்ளே, அலியார் தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தேவையான தண்ணீர் சுத்திகரிப்பான் (water filter) , 250 பாடக் குறிப்பேடுகள் ஆகியவற்றை ஏற்கனவே ரியாத் காயல் நல மன்றம் வழங்கியுள்ளது.இது தவிர பள்ளியின் சுற்றுப்புற கோட்டைச் சுவர் மிகவும் தாழ்வாக இருப்பதாகவும், வாசற்கதவு (Entrance gate) உயரம் குறைவாகவும், சேதமடைந்தும் சரிவர அடைக்கவியலாமல் உள்ளதாகவும் இதனால் பாதுகாப்பின்றியும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இதனால் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்திட பெற்றோர்கள் தயங்குவதாகவும், எனவே இக்குறைகளை சரி செய்து தருமாறும் தலைமையாசிரியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணிகளை செய்து முடித்திட பெரும் தொகை தேவைப்படுவதால், இறுதியாக இதனை செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறையில் தாயகம் வந்திருந்த சமூக ஆர்வலரும், ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசகருமான கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மது அபூபக்கர் அவர்கள் இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளைப் பார்வையிட வந்திருந்த போது ,பாதுகாப்பற்ற இப்பள்ளியின் கோட்டைச் சுவர் குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.
யாவற்றையும் பார்த்தறிந்த அவர், தன் நண்பர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறிவிட்டு, அதன்படி தாமதிக்காமல் தானும், தனது நண்பர்களும் இதற்கான பொறுப்பேற்றுக் கொள்வதாக வாக்களித்து, நிதியை சேகரித்து, உடனடியாக பணிகளை துவக்குமாறு கூறி அதற்காகும் நிதியான ரூபாய் 50,000/- வழங்கி உதவினார்.
அதன்படி உடனடியாக இந்தப் பணிகளை துவக்கப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியை கேட்டுக் கொண்டபடியே பள்ளியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதியிலும் கோட்டைச் சுவர் உயர்த்தப்பட்டு, முன் வாசற்கதவும் (இரும்புக் கதவும்) மாற்றப்பட்டும், உயரப்படுத்தியும் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளித்தலைமையாசிரியை மிகுந்த மகிழ்ச்சியடைந்து நன்கொடையளித்த சகோதரர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இதுவரை இந்த துவக்கப் பள்ளிகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு ரியாத் காயல் நல மன்றம் ரூபாய் 90,150/-, ஐக்கிய ராஜ்ஜிய (UK) காயல் நல மன்றம் ரூபாய் 69,000/-, கத்தார் காயல் நல மன்றம் ரூபாய் 9700/-, சமூக ஆர்வலர் கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மது அபூபக்கர் & நண்பர்கள் ரூபாய் 50,000/- என மொத்தம் ரூபாய் 2,18,850/- நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் மங்களவாடி துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 17,850/-, ஓடக்கரை துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 12,500/-, அலியார் தெரு (கே.டீ.எம். தெரு) துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 63,800/-, இரத்தினபுரி அருள்ராஜு துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 18,600/-, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 1,06,100/- என நலத்திட்ட உதவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் இந்த நலத் திட்டங்களை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
பள்ளிகளுக்கு தேவையான இதர உதவிகள் கூடிய விரைவில் வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும், இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |