தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மாடித் தோட்டங்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக, கத்தர் காயல் நல மன்றம் நடத்திய மாடித்தோட்டம் பயிற்சி முகாமில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
செயல்திட்டம் முன்வைப்பு:
காயல்பட்டினம் நகர்நலன் கருதி, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் - மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறிருக்க, மருத்துவ விழிப்புணர்வூட்டும் துறையில், இனி வருங்காலங்களில் புதிய பாதையில் பயணிப்பதென - 03.01.2015. அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற மன்ற அங்கத்தினரின் ஒன்றுகூடலின்போது - இயற்கை ஆர்வலர்களான சாளை பஷீர், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரின் தூண்டுதல் உரைகளைத் தொடர்ந்து முடிவு செய்யப்பட்டு, மன்ற செயற்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
புதிய பாதையில் பயணிக்க செயற்குழு முடிவு:
அதன் தொடர்ச்சியாக,
தற்கால நவீன உலகில், பொதுமக்கள் இயற்கையான வாழ்வியல் நெறிகளைத் தொலைத்து வருவது குறித்து இக்கூட்டம் கவலை தெரிவிப்பதோடு, முறையான வாழ்வியல் விழிப்புணர்வு செயல்திட்டங்களை அவ்வப்போது நகரில் செய்திடவும்,
நகர மகளிர் தம் நேரங்களை வீணாக்காமல், தமது இல்லங்களிலேயே மாடித் தோட்டங்களை அமைத்து, தம் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடத் தேவையான பயிற்சிகளையும், தேவையான விதை, செடி உள்ளிட்டவற்றையும் வழங்க சிறப்பு செயல்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்திடவும்
06.03.2015. அன்று கத்தரில் நடைபெற்ற - மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாடித்தோட்ட பயிற்றுநருடன் சந்திப்பு:
இத்தீர்மானத்தின் படி - மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் தலைமையில், சாளை பஷீர், ஹாஃபிழ் நஹ்வீ ஈஸா ஜக்கரிய்யா, கோனா அஜ்வாத் ஆகியோரடங்கிய குழு 12.12.2015. அன்று சிவகாசிக்குச் சென்று, மாடித்தோட்ட ஆய்வாளரும் - பயிற்றுநருமான திரு. பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து, நிகழ்ச்சிக்கான வடிவமைப்பை முடிவு செய்ததுடன், அவர் வீட்டு மாடியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தையும் பார்வையிட்டு வந்தது.
முகாம் அறிவிப்பு:
07.02.2016. ஞாயிற்றுக் கிழமையன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் மாடித்தோட்டம் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வோர் மட்டுமே முகாமில் பங்கேற்கலாம் என்றும் மன்றத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நகர மக்கள் பார்வைக்காக அது பிரசுரமாகவும், இணையதள செய்தியாகவும் வெளியிடப்பட்டது.
முன்பதிவுச் சீட்டுகளை முர்ஷித் ஜெராக்ஸ், மன்னர் ஜுவல்லர்ஸ், இக்ராஃ கல்விச் சங்கம் ஆகிய இடங்களில் பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையிலும், அச்சடிக்கப்பட்ட 500 முன்பதிவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
நுழைவுக் கட்டணத்திற்குப் பகரமாக விதைகள்:
நிகழ்வு நாளன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.
நுழைவாயிலில், அனைவரது முன்பதிவுச் சீட்டும் பெறப்பட்டு, அவர்கள் செலுத்திய 20 ரூபாய் நுழைவுக் கட்டணத்திற்குப் பகரமாக - காய்கறி, கீரை அடங்கிய 6 வகை விதைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்முறை:
காயல்பட்டினத்தில் இயற்கை வழி விவசாயம் மூலம் பயிரிடப்பட்ட உணவுப் பொருட்களைத் துவக்கமாக அறிமுகப்படுத்திய NSE ஆர்கானிக் நிறுவனத்தின் அதிபர் என்.எஸ்.இ.மஹ்மூது தலைமை தாங்கினார். பஹ்ரைன் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், துபை காயல் நல மன்ற முன்னாள் துணைத்தலைவர் துணி எம்.ஏ.முஹம்மத் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகியும், முகாம் ஏற்பாட்டாளருமான ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் என்.ஏ.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கத்தர் காயல் நல மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் அனைவரையும் வரவேற்றும், மன்றத்தின் நகர்நலப் பணிகளைச் சுருக்கமாக விளக்கியும் அறிமுகவுரையாற்றினார்.
இடையறாத மருத்துவப் பணிகளுக்கிடையிலும் தன் வீட்டையொட்டி அழகிய தோட்டத்தை அமைத்துப் பராமரித்து வரும் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் வாழ்த்துரையாற்றினார்.
நவீன காயல்பட்டினத்தின் முதல் விவசாயி என்ற பெயரைப் பெற்ற ‘செம்பருத்தி’ எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
உரையாற்றிய அனைவரும், ஆண்களோ - பெண்களோ... நகர மக்களுள் ஒருவர் கூட வேலை செய்யாமல் ஓய்ந்து கிடக்கக் கூடாது என்றும், பயனுள்ள ஏதேனும் உடல் உழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் நலனைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.
செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுநர் உரை:
தொடர்ந்து, மாடித்தோட்ட ஆய்வாளரும் - பயிற்றுநருமான சிவகாசி ஏ.பாலாஜி மேடையேறி, முகாமை வழிநடத்தினார்.
நவீனம் - நாகரிகம் என்ற பெயரில் இருந்த பசுமையைத் தொலைத்துவிட்டு, நோய்களை விலைக்கு வாங்கி, இன்று இல்லாத பசுமைக்கு ஏங்குவதாகக் கூறிய அவர், உயிரனங்களின் வாழ்வுக்கு பசுமை எவ்வளவு அவசியம் என்பதை விளக்கிப் பேசினார்.
தோட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவை பல மாடிக் கட்டிடங்களாக மாறிவிட்ட இக்காலத்திலும், அக்கட்டிடங்களுக்குப் பழுதில்லாமல் - மாடித்தோட்டம் அமைத்து, நமக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைச் செடிகள், நறுமண மலர்கள் ஆகியவற்றைப் பயிரிட்டுப் பயனடைய இயலும் என்று கூறிய அவர்,
கட்டிடங்கள் போக எஞ்சியிருக்கும் சிறிய இடங்களிலும், வீடுகளின் மொட்டை மாடியிலும் தோட்டம் அமைத்துப் பராமரிப்பது குறித்து, செய்முறை விளக்கப் பயிற்சியளித்தார். ஒரு பைசா கூட செலவில்லாமல் (Zero Budget), வீடுகளில் பயனற்றுக் கிடக்கும் உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டே மாடித்தோட்டத்தை அமைக்கலாம் என்ற கருத்தை அவர் வலியுறுத்திப் பேசினார்.
வினாவும் - விளக்கமும்:
நீண்ட உரையாக இல்லாமல், சில மணித்துளிகள் மட்டுமே பேச, எஞ்சிய நேரம் செய்முறை விளக்கத்திற்கும், பங்கேற்றோர் தம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றிடவும் வழிவகை செய்யப்பட்டது.
பார்வையாளர்களும் - தாங்கள் இம்முகாமில் பங்கேற்க மிகவும் பொருத்தமானவர்களே என்று உணர்த்தும் வகையில்,
>>> எங்கெங்கு தோட்டம் அமைக்கலாம்?
>>> எவற்றையெல்லாம் பயிரிடலாம்?
>>> பயிரிடுவதற்கான முறைகள் என்னென்ன?
>>> கட்டிடம் பழுதாகாமல் மாடித்தோட்டம் அமைத்துப் பராமரிப்பதெப்படி?
>>> பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விரட்ட இயற்கை வழியில் என்ன செய்யலாம்?
>>> இரசாயண உரங்களைத் தவிர்த்தால், இயற்கை உரங்களை தயாரிப்பதும், பயன்படுத்துவதும் எப்படி?
போன்ற பல கேள்விகளைக் கேட்க, அவர்களின் ஆர்வத்தைக் கருத்திற்கொண்ட பயிற்றுநர், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அவர்களுக்கு பொறுமையுடனும், ஆர்வத்துடனும் விளக்கமளித்தார்.
முற்றிலும் மாறுபட்ட சிற்றுண்டி:
பயிற்றுநரின் அறிமுகவுரை, செய்முறை விளக்கத்தைத் தொடர்ந்து, கேள்வி - பதில் நிகழ்ச்சிக்கு முன்பாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி அனைவருக்கும்
தேங்காய் - குண்டு நெல்லிக்காய் துண்டுகள், கேரட் துருவல்களை முளை கட்டிய சிறுபயிறுடன் கலந்து சிற்றுண்டியாகவும்,
சம்பா அவல், வாழைப்பழம், ஆப்பிள் பழம், பேரீத்தம்பழம் ஆகியவற்றை உள்ளடக்கிய அவல் கஞ்சி பழக்கூழ் குடிபானமாகவும் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.
வழமைக்கு மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட இச்சிற்றுண்டி பதார்த்தங்களை, ‘எனக்கு உனக்கு’ என அனைவரும் போட்டி போட்டு ஆர்வத்துடன் உட்கொள்ளவே - பயிற்றுநருக்கும், ஏற்பாட்டாளர்கள் சிலருக்கும் கூட இல்லாத அளவுக்கு அனைத்தும் தீர்ந்துவிட்டது.
சால்வை அணிவிப்பு:
இம்முகாமில், அவையோர் அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
முகாமின் பிரதிபலிப்பாக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாடித்தோட்டத்தை அமைத்துப் பராமரிப்போருள் சிறந்த தோட்ட அமைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மதிப்புமிக்க ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும் என இதன்போது அறிவிக்கப்பட்டது.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூற, ஜெ.ஆர்.நெய்னா துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இம்முகாமில், நுழைவுக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த 500 பேரும் கலந்துகொண்டனர். அவர்கள் தவிர, குறித்த காலத்தில் முன்பதிவுச் சீட்டு பெறாமல் தவறவிட்ட சுமார் 50 பேர், நிகழ்விடத்தில் நுழைவுக் கட்டணம் செலுத்தி, சிறப்பு அனுமதி பெற்று முகாமில் பங்கேற்றனர்.
தன்னார்வலர்களின் தன்னிகரற்ற பணி:
பங்கேற்பாளர்களை பெயர் பதிவு செய்தல், சிற்றுண்டி வினியோகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அங்கத்தினரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்களும் சிறப்புற செய்திருந்தனர். நிகழ்விடத்தில், இயற்கை வழி விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், வாழ்வியல் வழிகாட்டல்கள் அடங்கிய பல தலைப்புகளிலான நூற்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடு:
முகாம் ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற துணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி தலைமையில், அவரது சகோதரர் எஸ்.ஏ.தவ்ஹீத், கத்தர் காயல் நல மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான், செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், அதன் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், கத்தரிலிருந்தவாறு அதன் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், பொருளாளர் கே.எஸ்.டீ.முஹம்மத் அஸ்லம், முன்னாள் தலைவரும் - நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகப் பொறுப்பாளர் எம்.புகாரீ ஆகியோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
பங்கேற்றோரின் பின்னூட்டம்:
இதுகாலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், முகாம்களுள் - இந்த மாடித்தோட்டம் பயிற்சி முகாம் புதியதோர் அறிமுகம் என்றும், இக்காலச் சூழலுக்கு மிகவும் அவசியமானது என்றும், அனைவரின் ஆர்வத்தையும் இம்முகாம் கிளறிவிட்டுள்ளதாகவும், பங்கேற்றோர் பலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினர்.
அது மட்டுமின்றி, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தமது கட்டிடங்களின் மொட்டை மாடி, கிடைக்கும் சிறு இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தோட்டம் அமைத்து, விதைகளை விதைத்துப் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நினைவுப் பரிசு:
நடைபெற்ற மாடித்தோட்டம் பயிற்சி முகாமின் தொடர்ச்சியாக, 17.02.2016. புதன்கிழமையன்று, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான், துணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் சிவகாசிக்குப் பயணித்துச் சென்று, மாடித்தோட்ட ஆய்வாளரும் - பயிற்றுநருமான சிவகாசி ஏ.பாலாஜி அவர்களைச் சந்தித்து, அவர்கள் செய்து வரும் மக்கள் நலப் பணி தெருமுனை பரப்புரைக்காக Amplified Speaker மெகா ஃபோனை - மன்றத்தின் நினைவுப் பரிசாக வழங்கினர்.
அடுத்த 6 மாதங்களில் வேறு அம்சத்துடன் புதிய நிகழ்ச்சி:
இயற்கை வழி வாழ்வியல் தொடர்பான புதிய அம்சத்துடன் - வரும் ரமழான் நோன்புப் பெருநாளையடுத்த சில நாட்களில் அடுத்த முகாமை நடத்திட இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
முகாமில் பங்கேற்றோர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பொருட்களை, காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவிலுள்ள NSE ஆர்கானிக் கடையில், உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ (காயல்பட்டினம்) &
சாந்தா டிஜிட்டல் (ஆறுமுகநேரி)
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |