காயல்பட்டினம் உள்ளூர் இணையதளம் ஒன்றும், இப்போது.காம் இணையதளமும் இணைந்து, 13.02.2016. அன்று “மக்களே செய்தியாளர்!” எனும் தலைப்பில், பிரதான வீதியில் – ஹாஜியப்பா தைக்கா பள்ளி எதிரில் அமைந்துள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் - ஹனியா சிற்றரங்கில் கருத்தரங்கம் நடத்தின.
முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், எஸ்.ஐ.தஸ்தகீர், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் முஜாஹித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றதோடு, நிகழ்ச்சி - சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையும் ஆற்றினார். “ஊடக தாக்கம்” எனும் தலைப்பில் தம்மாம் இஸ்மாஈல் உரையாற்றினார்.
இன்றைய இணையதளங்கள், தொடுதிரை கைபேசிகளை இளைஞர்கள் பயன்படுத்தும் விதம் குறித்து கவலை தெரிவித்த அவர்கள், அதற்கான மாற்று குறித்து சிந்திப்பதற்காகவே இக்கருத்தரங்கம் நடத்தப்படுவதாகக் கூறினர்.
இப்போது.காம் இணையதள நிறுவனரும் - ஊடகவியலாளருமான பீர் முஹம்மத் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “சுய விளக்கம் மற்றும் சமூக அக்கறை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஊடகங்களின் பக்க சார்பு நிலையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் களத்தில் இறங்கியிருப்பதாகக் கூறினார். இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை வெகுவாகப் பின்தங்கியிருப்பதற்கு, உணர்வுப்பூர்வமாக எடுக்க வேண்டிய முடிவுகளை உணர்ச்சிப்பூர்வமாக எடுப்பதே காரணம் என்றார்.
தமிழக மக்கள் இலவசங்களில் மனதைத் தொலைத்துள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், இன்றைய ஆட்சியாளர்களுக்கு மாற்றாக ஊடகத்துறை யாரை அடையாளம் காட்டுவர் என்று கேள்வியெழுப்பினார்.
சுற்றுச்சூழல் மாசு, முஸ்லிம்களின் ஒற்றுமையின்மை குறித்தும் பேசிய அவர், அதற்கான தீர்வுகளாக சில அம்சங்களை முன்வைத்தார்.
துவக்கத்தில் உரையாகவும், பின்னர் வினாக்களுக்கான விடையாகவும் அவர் கருத்துக்களை முன்வைத்தார். ‘அன்பின்’ அலாவுத்தீன் அவரை நேர்காணல் செய்தார். பார்வையாளர்களும் பல கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. காயல்பட்டினம் நகரின் பல்வேறு தளங்களில் இயங்கும் சமூக - இலக்கிய ஆர்வலர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
படங்களுள் உதவி & தகவல்:
M.M.முஜாஹித் அலீ
|