தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
பெண்களுக்கு இடஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஏற்கனவே 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி
ஒன்றியம், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள்
பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்றன.
கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 458 பதவி இடங்களில் 44
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.
50 சதவீதமாக உயர்வு
இந்த இடஒதுக்கீட்டை தமிழக அரசு தற்போது 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவி இடங்களில்
பாதிக்கு பாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டு
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சட்டசபையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி 2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
அந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெண்களுக்கு அதிகாரம்
1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள
இடங்களின் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்குவதற்கு வகை செய்கிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்தும் வகையிலும், ஊரக வளர்ச்சியில் பெண்கள் பங்கு பெறுவதை எளிதாக்கும் வகையிலும்
பெண்களுக்கான ஒதுக்கீடு சதவீதம், இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கு என்று இருப்பதை 50 சதவீதம் என
அதிகரிக்க செய்வது தேவையானது என அரசு கருதுகிறது. அதற்கு இணங்க 1994-ம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தை மேற்சொன்ன நோக்கத்திற்காக
பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம்
கொடுக்க விழைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நகராட்சி சட்டங்கள்
இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்த) சட்ட முன்வடிவையும் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நகர உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த
எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கினை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வகை செய்கிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்துவதற்காகவும், நகரத்தின் மேம்பாட்டில் பெண்கள் பங்கு கொள்வதை எளிதாக்கும் வகையிலும்
இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
மாநகராட்சிகள்
இதை ஒன்றில் பாதியாக (50 சதவீதம்) அதிகரிப்பது தேவையானதாக இருக்கிறதென்று அரசு கருதுகிறது. அதற்கு இணங்க 1919-ம் ஆண்டு சென்னை
மாநகராட்சி சட்டம், 1971-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டம், 1981-ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டம், 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டம், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள், 1994-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி சட்டம், திருநெல்வேலி மாநகராட்சி
சட்டம், சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளின் சட்டங்கள் ஆகியவற்றை பொருந்தத்தக்க
வகையில் திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்கிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மசோதாக்கள் நிறைவேறின
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு பாதி இடங் களை ஒதுக்க வகை செய்யும் இந்த இரு சட்ட திருத்த மசோதாக்களும் உறுப்பினர்களின்
ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. எனவே, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து நடைபெறும் தேர்தலின் போது 50 சதவீத
பதவி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
தகவல்:
தினத்தந்தி |