சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 05.05.2016. வியாழக்கிழமையன்று 19.40 மணி முதல் 21.00 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீன் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
துணைக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை வரவேற்றுப் பேசிய அவர், அழைப்பையேற்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக அவருக்கு நன்றி கூறினார்.
அண்மையில் நடைபெற்ற - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி முறையாகத் திட்டமிடப்பட்டு, கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டிப் பேசிய அவர், இதுகுறித்து சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதித்து, இனி வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தனதுரையில் முன்வைத்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை உள்ளடக்கி, மன்றச் செயலர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் பேசினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, செயற்குழு உறுப்பினர் எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ - பொருளாளர் அபூ முஹம்மத் உதுமான் உடைய ஒத்துழைப்புடன் சமர்ப்பித்தார்.
நடப்பு நிதிநிலை, வரவு-செலவு விபரங்கள், நடப்பாண்டின் முதல் காலாண்டிற்கான மன்ற உறுப்பினர்களின் சந்தா நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து தகவல் தெரிவித்த அவர், நிலுவைச் சந்தா தொகைகள் குறித்து உறுப்பினர்களுக்கு நினைவூட்டி, அவற்றை விரைவாகப் பெற்றிட வேண்டும் என்று கூறினார்.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
பல்வேறு தேவைகளை முன்வைத்து, மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள செயற்குழு உறுப்பினர் தவ்ஹீத் பொறுப்பளிக்கப்பட்டிருந்தார். பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் யாவும், முதற்கட்ட பரிசீலனைக்குப் பின் - நிதியொதுக்கீட்டுப் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
வழமை போல நடப்பாண்டும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய, நிராதரவான குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளை முன்மொழிய 08.05.2016. கடைசி நாளாகும் என்றும், அதற்குள் உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த - தகுதியான பயனாளிகளின் பெயர்களை மன்ற நிர்வாகத்திடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்றும், நடப்பாண்டில் இச்செயல்திட்டத்தை குறித்த காலத்தில் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் - அதற்கான தனிப் பொறுப்பாளர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் கூறினார்.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
இக்கூட்டத்தில் பின்வருமாறு நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டது:-
>>> இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு ரூ.25,000
>>> “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் பரிசளிப்பு வகைக்காக ரூ.20,000
>>> திருமறை குர்ஆனை மனனம் செய்து முடிக்கும் - நகர மத்ரஸாக்களின் ஹாஃபிழ்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்காக ரூ.52,500
>>> தக்வா மன்ற முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் - நகர பள்ளிவாசல்களின் இமாம் & பிலால் பெருநாள் ஊக்கத் தொகை திட்டத்திற்காக ரூ.25,000
என மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய வங்கிக் கணக்கு:
மன்றத்தின் பணப்பரிமாற்றத்திற்காக இதுகாலம் வரை பயன்படுத்தப்பட்டு வந்த DBS வங்கிக் கணக்கை உடனடியாக முடித்துக்கொள்ளவும், இந்தியன் வங்கியில் புதிய கணக்கைத் துவக்கவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, நடப்பு கணக்கை முடிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக மன்றச் செயலாளர் & பொருளாளர் ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
முதியோர் நலத்திட்டம் & ஜகாத் நிதி சேகரிப்பு:
மன்றத்தின் நடப்பாண்டு ரமழான் மாதத்திற்கான ஜகாத் நிதியை உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கவும், முதியோர் நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
(1) எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்,
(2) எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ,
(3) எஸ்.ஐ.எஸ்.ஜக்கரிய்யா
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
முதியோர் நலத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கான நிரந்தர செயல்முறையை (Standard Operating Procedure - SOP) மீளாய்வு செய்ய வேண்டும் என்று மன்ற துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூறினார். அதனடிப்படையில்,
(1) எம்.ஆர்.ரஷீத் ஜமான்,
(2) கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்,
(3) எம்.எம்.மொகுதூம் முஹம்மத்,
(4) எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. நிரந்தர செயல்முறையை மீளாய்வு செய்து, தேவையான பரிந்துரைகளைச் செய்து, புதிய செயல்முறைக்கு - அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கு முன்பாக ஒப்புதலளிக்க இக்குழுவிற்கு கூட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டது.
பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:
கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுத்துச் செய்யப்படும், “ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை இலவச வினியோகம்” திட்டத்தில் இணைய தீர்மானிக்கப்பட்டு, அவ்வகைக்காக - நடப்பாண்டு 25 செட் பள்ளிச் சீருடைகளுக்கு நிதியளிக்க தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ஜித்தா காயல் நல மன்றத் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீன் குறித்து, மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அறிமுகவுரையாற்றினார். மன்ற உறுப்பினர்களை - மன்றப் பணிகளின்பால் ஆர்வமூட்டிக் கவர்ந்திழுக்கும் அம்சத்தை ஜித்தா காயல் நல மன்றம் சிறப்புற செய்வதாகப் புகழ்ந்துரைத்த அவர், அதே போன்று சிங்கப்பூர் மன்றமும் செய்ய வேண்டும் என்றார். பின்னர், சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார்.
தன்னை இக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்தமைக்காக சிங்கை மன்றத்தினர் யாவருக்கும் நன்றி கூறிய அவர், கூட்டத்தில் நடைபெற்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களையெல்லாம் பார்த்த தனக்கு, அந்நடவடிக்கை மிகுந்த உற்சாகமளித்துள்ளதாகக் கூறினார்.
தான் சார்ந்துள்ள ஜித்தா காயல் நல மன்றம் துவங்கப்பட்டது முதல் இன்றளவிலான செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக விவரித்த அவர், தம் மன்றத்திற்கும் - சிங்கை மன்றத்திற்கும் இடையிலும், இரு மன்றங்களின் உறுப்பினர்களது இயல்புகளிலும் நிறைய வேறுபாடுகளைத் தான் காண்பதாக அவர் கூறினார்.
ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்முயற்சியில் இக்ராஃ கல்விச் சங்கம் துவங்கப்பட்டது முதல், உலக காயல் நல மன்றங்களின் உறுதுணையோடு இன்றளவிலான அதன் பயணம் குறித்துப் பேசிய அவர், இயலா நிலையிலுள்ள பல குடும்பங்களிலிருந்து நல்ல பட்டதாரிகள் உருவாகி, அவர்கள் தம் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்கு இக்ராஃ பல்லாண்டு காலமாக முக்கிய காரணமாகத் திகழ்வதாகக் கூறினார்.
இக்ராஃ மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை - தேவையில் ஒரு பகுதியை மட்டும் நிறைவேற்றுவதைத் தவிர்த்து, தகுதியுள்ள மாணவர்களுக்கு - அவர்களுக்கான முழுத் தொகையையும் வழங்குவதே முழுப்பலனைத் தரும் என்றும், இக்ராஃவில் அங்கம் வகிக்கும் காயல் நல மன்றங்களும், இணைந்து செயல்படும் இதர மன்றங்களும் இது குறித்து தீவிரமாகக் கலந்தாலோசித்து விரைவாக ஒரு நல்ல செயல்திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளை இன்னும் மேம்படுத்துவதற்குத் தேவையான நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய அவர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற Food Hygiene நிகழ்ச்சியில் தனக்கேற்பட்ட பட்டறிவு குறித்து கூட்டத்தில் கருத்துக்களைப் பரிமாறியதோடு, இதை மன்றத்தின் ஒரு திட்டமாகக் கொண்டு வருங்காலங்களில் செயல்படுத்திட சிங்கை மன்றம் முன்வர வேண்டும் என்று கேட்டு, தனதுரையை முடித்துக்கொண்டார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|