சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (19-ந் தேதி) எண்ணப்படுகின்றன. தூத்துக்குடியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ரவிகுமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு தொகுதி வாரியாக வைக்கப்பட்டு உள்ளன.
அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், எந்திரங்கள் இருக்கும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரவிகுமார் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையம், 24 மணி நேரமும் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 19-ந் தேதி (நாளை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளுக்கு 20 சுற்றுகளும், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் தொகுதிகளுக்கு தலா 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின் போது தொகுதிக்கு 90 அலுவலர்கள் வீதம் 6 தொகுதிகளுக்கு 540 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தகவல்:
www.tutyonline.com |