தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்று, முடிவுகள் 19.05.2016. அன்று வெளியாயின. அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1194 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்ற - காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இன்று காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டார்.
தொழுகை நிறைவுற்றதும், பள்ளியில் இருந்த பொதுமக்கள் அனைவரும், புதிய சட்டமன்ற உறுப்பினரைச் சுற்றி வளைத்து, வாழ்த்துக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து தமது உற்சாகத்தை அவருடன் பரிமாறிக்கொண்டனர்.
மூத்த மார்க்க அறிஞர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் / அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் தலைவர் / தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் / முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, முஸ்லிம் லீக் மூத்த தலைவர் வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களையும், நகரப் பிரமுகர்களையும் அவர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும், அங்கத்தினரும் இதன்போது உடனிருந்தனர்.
காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு, நகர பொதுமக்கள் சார்பில் இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும், ஜும்ஆ தொழுகைக்குப் பின் பள்ளி நிர்வாகத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டது.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|