காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் எனும் புதுப்பள்ளி, தரைமட்டத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீர் பள்ளிக்குள்ளும் தேங்கி, தொழ வழியற்ற நிலை ஏற்படுவது வாடிக்கை. இதனைக் கருத்திற்கொண்டும், தொழுகையாளிகள் வரவுக்கேற்ப பள்ளியில் போதிய இடவசதி இல்லாமையைக் கருத்திற்கொண்டும், இப்பள்ளியின் பழைய கட்டிடத்தை அகற்றி, சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்துக் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழா, 27.05.2016. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், பள்ளி தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ பிரார்த்தனை செய்து நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்ததோடு, முதல் கல்லை எடுத்துக் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகள், அங்கத்தினர், ஜமாஅத்தார் அடுத்தடுத்த கற்களை எடுத்துக்கொடுக்க, அடிக்கல்லுக்கான அகழியில் அவை முறைப்படி வைக்கப்பட்டது.
துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதில், புதுப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |