காயல்பட்டினம் தீவுத்தெருவில் இயங்கி வந்த ஃபாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, அரசு அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகக் கூறி, 26.05.2016. அன்று அரசால் முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும், தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் வாசகம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், காயல்பட்டினம் தீவுத்தெருவில் பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அரசு அனுமதி பெறாமல், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, 26.05.2016. அன்று பள்ளியைப் பூட்டி அரசால் சீல் வைக்கப்படுகிறது. எனவே, இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், அரசு அனுமதி பெறாததால் இப்பள்ளியால் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் செல்லாது. எனவே, வேறு பள்ளிகளில் அடுத்த வகுப்பு சேர்ந்து படிக்க இயலாத நிலை மாணவர்களுக்கு ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களுக்கு இவ்வறிவிப்பு தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்த மேலும் விபரங்களுக்கு, 94866 86258, 97509 83060 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் அடியில், ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் பெயரும், முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, இன்று காலையில் ஃபாத்திமா நர்ஸரி பள்ளியின் முத்திரை (சீல்) உடைக்கப்பட்டு, பள்ளியில் வகுப்பு நடைபெற்ற தகவலையறிந்து, கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் பாரதி நேரில் வந்து விசாரித்துச் சென்றார். பின்னர், காயல்பட்டணம்.காம் இடம் பேசிய அவர், அரசால் முத்திரையை அகற்ற உத்தரவு பெறப்படாத நிலையில், முத்திரை அகற்றப்பட்டு வகுப்பும் நடைபெறுவதாகவும், இதுகுறித்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் கூறினார்.
ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|