காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்த 15.5.2016 அன்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பொழுதுபோக்க வைக்கும் இடங்களில் ஒன்றான Tai Tong Organic Eco Park என்ற இடத்தில், இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சிற்றுலா செல்வதற்காக, அன்று காலை 09.00 மணிக்கு ஓரிடத்தில் ஒன்று கூடி, இரண்டு பேருந்துகளில் சிற்றுலா இடத்தை அனைவரும் வந்தடைந்தனர். ஹாங்காங் வாழ் காயலர் குடும்பத்தினர் மற்றும் விடுமுறையில் ஹாங்காங் வந்துள்ள காயலர்கள் என மொத்தம் 130 பேரை உள்ளடக்கிய சிற்றுலாக் குழு காலை 10.30 மணியளவில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் தங்களது கட்டணத்தை பொறுப்பாளர்களிடம் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கலுக்கான கூப்பன்களைப் பெற்றுக்கொண்டனர். சிற்றுலா தலத்திலுள்ள விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைப் பற்றி சிற்றுலா குழு விளக்கிப் பேசினர். அதனைத் தொடர்ந்து, அவரவர் தமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடக் களமிறங்கினர். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் - கால்பந்து, சைக்கிள் ஓட்டுதல், அருவி குளியல், மாட்டு வண்டி சவாரி, குதிரை சவாரி, விளங்குகளுக்கு உணவளிப்பது, கயிறு ஏறுதல், குழந்தைகள் விளையாட்டுகள், இயற்கை வேளாண்மையை பார்வயிடுதல் மற்றும் இதர விளையாட்டுகளிலும் மகிழ்வுற பொழுதைக் கழித்தனர்.
லுஹர் தொழுகைக்குப் பின், இல்லங்களிலிருந்து சமைத்துக் கொண்டு வந்திருந்த சுவையான உணவுகளை அனைவரும் கூட்டாக அமர்ந்து, ஆர்வமுடன் மதிய உணவு உண்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர், சிலர் ஓய்வு எடுத்தனர். மற்றவர்கள் மீண்டும் விளையாட்டுகளிலும் அருவிக் குளியலிலும் ஈடுபட்டனர்.
பின்னர், 3.30 மணிக்கு பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி தலைமையில் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாங்காங் மற்றும் சீனாவில் காயலர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சார்பில் அப்பரிசுகளுக்கு அனுசரணையளிக்கப்பட்டிருந்தது.
ஹாஃபிழ் முஹியத்தின் அவர்களின் துஆவுடன் மாலை 05.30 மணியளவில் சிற்றுலா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் மகிழ்ச்சியான நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவை சார்பில் இதற்கு முன் (கடந்தாண்டு மே மாதம்) ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|