திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில், 01.07.2016. வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்நாளில், புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய பகுதிகளில், அன்று 09.00 மணி முதல் 14.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பம் என திருச்செந்தூர் மின்சார வினியோகப் பொறியாளர் அறிவித்துள்ளதாக, வாட்ஸ் அப் வழியே பெறப்பட்ட தகவலை, காயல்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர்புகொண்டு உறுதி செய்த பின் காயல்பட்டணம்.காம் செய்தியாக வெளியிட்டது.
14.00 மணிக்கு மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், 10 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 19.00 மணிக்கே மீண்டும் மின் வினியோகிக்கப்பட்டது.
சாதாரண நாட்களிலேயே இது பொதுமக்களுக்கு மிகுந்த அவதியை அளித்து வரும் நிலையில், தற்போது ரமழான் - நோன்பு காலமாக இருப்பதால், நோன்பு துறக்கும் நேரமான 18.30 மணி வரையிலும் மின் வினியோகம் இல்லாததால் காயல்பட்டினம் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி, கொதிப்பில் உள்ளனர்.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் பல நாட்களிலும், பெருநாள் அன்றும் திட்டமிட்டே மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாகவும், அறவழியில் போராடி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், “நடப்பது என்ன?” என்ற வாட்ஸ் அப் குழுமம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாகவும் தமது கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இதுகுறித்து, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகம், ஆறுமுகநேரி துணை மின் நிலைய அலுவலகம் ஆகியவற்றைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது “Busy Status” குரல் பெறப்பட்டதே ஒழிய இணைப்பு கிடைக்கவேயில்லை. மின்வாரிய அலுவலர் ஒருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது, அடுத்த சில நிமிடங்களில் மின் வினியோகிக்கப்படும் என்று கூறிய அவர், 10 மணி நேர தாமதம் குறித்து காரணம் வினவியதற்கு விடையளிக்கவில்லை.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, நகரில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மாதாந்திர பராமரிப்பு மின்தடை தொடர்பான முந்தைய (ஜூன் 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |