கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 27ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகியன, 10.06.2016 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், கத்தர் - தோஹா அல் சாத்திலுள்ள "Motee மஹால்" ரெஸ்டாரெண்ட்டில் வைத்து நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!
பெயர் பதிவு:
வாகன வசதி இல்லாதோருக்கு தனியாக வாகன வசதி சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் மூலமாக செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வின் துவக்கமாக, உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, மன்றப் பொருளாளர் அஸ்லம், துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் மற்றும் ஹுஸைன் ஹல்லாஜ்,ஆகியோர் நெறிபடுத்தினர்.
மன்ற செயலாளர் M .N . முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான பாஜுல் கரீம், கே.வி.ஏ.டீ.கபீர், கே.வி.ஏ.டீ. ஹபீப் மற்றும் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
கூட்ட நிகழ்வுகள்:
மன்ற உறுப்பினர் ஹாபிழ் SS முஹம்மது முஹியத்தீன் அவர்கள் இறைமறையை ஓதி இனிதே துவக்கி வைத்தார். வழமைபோல், "கவிக்குயில்" ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. சொளுக்கு முஹம்மத் இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக, கத்தர் கடையநல்லூர் நல மன்றத்தின் ஆலோசகரும், மார்க்க அறினருமான மௌலவி ஷா ஆலிம் மஹ்லரி அவர்களும், கத்தர் காயல் நல மன்றத்தின் நலம் விரும்பி மற்றும் பல உதவிகளை செய்து வரும் சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையுரையாற்றினார்.
இந்த இனிய மாலைப்பொழுதில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள் இதுநாள் வரை மன்றம் செய்த சேவைகளை பட்டியலிட்டு அனைவரையும் கவரும் வண்ணம் எழின்மிகு முறையில் திறம்பட எடுத்துரைத்தார்.
மன்றத்தால் சேகரிக்க படும் சந்தா மற்றும் ஒரு நாள் ஊதிய நன்கொடைகளை நாம் யாரென்றே தெரியாத நபர்களுக்கு வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.
புற்றுநோய் முகாம்:
கடந்த பல ஆண்டுகளாக நம் நகருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, மக்களின் வாழ்வதனை சீர்குலைத்து வரும் புற்றுநோய் குறித்து கவலை கொண்டு யாரும் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்த நிலையில் நம் மன்றம் முன்னின்று புற்றுநோய் குறித்தான களப்பணியில் இறங்கி இன்னும் சேவையை தொடர்கின்றது. இதில் மிகவும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்நோய் குறித்தான விழிப்புணர்வை விட மக்களின் மனதில் பயம் எனும் அறியாமையே அதிகமாக ஆக்கிரமித்துள்ளது. இதனை களைந்தெறிவது நம்மவரின் தலையாய கடமையென கருதி, விழிப்புணர்வை முதலில் நம்மிலிருந்து நம் குடும்பத்தாரிலிருந்து நாம் துவங்கிட வேண்டும்.
ஹாங்காங் பேரவை - வாழ்த்து:
புற்று நோய் குறித்தான நமது அனைத்து முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நம்மோடு இணைந்து பங்காற்றிய ஹாங்காங் பேரவையின் அங்கத்தினர்களுக்கு நன்றி கூற இந்நேரத்தில் கடமைபட்டுள்ளோம். அவர்களின் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.
தேர்வு முடிவுகள்:
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அந்த சமூகம் கல்வியறிவு அடைந்ததாக இருக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு அதனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை மன்றம் நடத்தி வருகிறது. ஆனால், அண்மையில் வெளியான SSLC, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நம்மை மிகவும் கவலை கொள்ள செய்கிறது.
இவ்வளவு எளிமையாக கல்வி கற்க நம் ஊர் சார்ந்த அனைத்து நல மன்றங்களும் முயற்சித்தும், அதனை சரியாக முறையில் பயன்படுத்தாமல் போகும்போது "விரலுக்கு இரைத்த நீர் போல ஆகிவிடுமோ...." என்ற அச்சமே தளைத்தோங்குகிறது. எனவே, இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தி ஆவன செய்யப்பட வேண்டும்
பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:
கல்வி பணியில் மற்றுமொரு அங்கமாக, கடந்த 7 ஆண்டுகளாக சமூகத்தில் நலிவுற்ற ஏழை - எளிய மாணவ-மாணவியர்களுக்கு இதுவரை இறையருளால் 1000 கும் மேற்பட்ட இலவச சீருடைகள் வழங்கி வந்துள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் , நடப்பு கல்வியாண்டில் 100 மாணவ-மாணவிய கண்மணிகளுக்கு, கத்தர் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் (KWAUK), சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS), பஹ்ரைன் காயல் நல மன்றம் (BAKWA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிச் சீருடைகளை இலவசமாக வழங்கும் திட்டம், இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் நடைமுறைப்படுத்த ஆவண செய்யப்பட்டுள்ளது.
இந்த நல்ல திட்டத்திற்கு உறுதுணை புரிந்து ஆதரவு அளித்துள்ள மேற்படி அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் கத்தர் காயல் நல மன்றம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
இயற்கை வழி உணவு முறைகள்:
நமது மருத்துவ பிரிவின் இன்னுமொரு திட்டம் தான் இயற்க்கை வழி உணவு முறைகள் . பொதுமக்கள் ரசாயண நஞ்சு கலக்கப்படாத உணவு வகைகளையே உண்ண வேண்டும் என்ற அடிப்படையிலும், இல்லதாய்மார்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கும் வகையிலும், தமது வீடுகளின் மாடி உள்ளிட்ட - கிடைக்கும் சிறு இடங்களில் காய்கறிகள், கீரைகளைப் பயிரிடுவதற்காக, ‘மாடித்தோட்ட பயிற்சி’ நிகழ்ச்சி 07.02.2016 அன்று நடத்தி மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்துள்ளோம் என்றால் அது மிகையாகாது. ஆயினும், இது தொடர வேண்டும் நம்மிலிருந்து.....!
வாழ்த்துரை:
மன்றத்தின் நலப்பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, முன்னிலை வகித்த மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டீ.கபீர் அவர்கள் நோன்பும் மருத்துவ பலனும் என்ற அடிப்படையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இஃப்தார் - தொழுகை இடைவேளை:
மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, இரண்டாம் அமர்வு துவங்கியது.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் அஸ்லம், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.
மேலும், நடப்பாண்டில் மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில், உறுப்பினர்களின் சந்தா மற்றும் ஒரு நாள் ஊதிய நன்கொடை நிதிகள் சென்ற வருடத்தைவிட குறைந்திருப்பது வருந்ததக்கது. ஆகையால், மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - நகர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் உரை:
கத்தர் கடையநல்லூர் நல மன்றத்தின் ஆலோசகரும், மார்க்க அறினருமான மௌலவி ஷா ஆலிம் மஹ்லரி அவர்களுக்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்கள் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
கத்தர் காயல் நல மன்றத்தின் இந்த அருமையான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள என்னை அழைத்து வாய்ப்பளித்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயலர்களுடனான நெருக்கம் நான் மஹ்லரா அரபிக்கல்லூரியில் பயிலும் போதிலிருந்து ஆரம்பம். மிகவும் கண்ணியமிகுந்தவர்கள் மற்றும் ஓற்றுமைக்கு பேர் பெற்றவர்கள். எனவே தான், எங்கள் கத்தர் கடையநல்லூர் நல மன்றம் துவங்கும் போது உங்களது மன்ற பணிகளை வலைத்தளம் மூலம் பணிகளை எவ்வாறு திட்டமிட்டு நடைமுறை படுத்தப்படுகின்றன என்பதனை அவ்வப்போது அவதானித்தோம்.
குறிப்பாக, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது எங்களது தொகுதியில் உங்களது ஊரை சார்ந்த அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவித்தபோது, இங்குள்ள மன்ற நிர்வாகிகள் எங்களை தொடர்பு கொண்டு, எங்களது செயற்குழுவில் பங்கேற்று கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களின் சமூக சேவைகளை எங்களுக்கு சிறப்புற எடுத்துரைத்து உங்களது ஊரின் ஓற்றுமையை பறைசாற்றிய விதம் பெரிதும் கவர்ந்தது. இறைஅருளால் அவர் வெற்றி வாகை சூடியதில் எங்களுக்கும் பெருமை...!
எல்லாம் வல்ல இறைவன் உங்களது சேவைகளை பொருந்தி கொள்வானாக..! உங்களது பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அடுத்ததாக, நம் நல மன்றத்தின் நலம் விரும்பி சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு மூத்த உறுப்பினர் பாஜுல் கரீம் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
குலுக்கலில் பரிசு:
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அதில் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர்களைத் சிறப்பு விருந்திர்னர்கள் தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
நடப்பு நிகழ்ச்சியில், ‘ஒருநாள் ஊதிய நன்கொடை’ வழங்கும் திட்டத்தின் கீழ் - மூடி உறையிடப்பட்ட பெட்டியில் நிதி சேகரிக்கப்பட்டது. இவ்வகைக்காக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் தொகை சேகரமானது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி...!
நன்றியுரை:
சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் நன்றி நவிழ, ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. அல்ஹம்து லில்லாஹ்...!
தொடர்ந்து பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, ஹுசைன் ஹல்லாஜ், சொளுக்கு முஹம்மத் இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர். அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் விடைபெற்று சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் கா.ந.மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் கா.ந.மன்றத்தின் முந்தைய (26ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|