கடந்த 29.06.2016. புதன்கிழமையன்று மாலையில், காயல்பட்டினம் கலீஃபா அப்பா தைக்காவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக பிரசுரம் ஒன்றை, சமத்துவ மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் அப்துல் அஜீஸ், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் அமிலக் கழிவு ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் பினோ ஆகியோரால் நகரின் பல பகுதிகளில் வினியோகிக்கப்பட்டது.
அப்பிரசுரத்தில், இந்நிகழ்ச்சியை நடத்துவோராக “பொதுநல அமைப்புகள் - காயல்பட்டினம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அச்சிட்ட அச்சகத்தின் பெயர் பிரசுரத்தில் இல்லை.
இது, நகரின் சமூக ஆர்வலர்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, நிகழ்ச்சி நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டிருந்த - காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவிலிருக்கும் கலீஃபா அப்பா தைக்கா நிர்வாகத் தலைவர் ‘மரக்கடை’ சாமு நெய்னாவிடம் சமூக ஆர்வலர்கள் பலர் முறையிட்டதையடுத்து, நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட இட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக, “நடப்பது என்ன?” வாட்ஸ் அப் குழுமத்தின் வழியாக அவர் பின்வருமாறு பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிட்டார்:-
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் காயல்பட்டினம் கலீஃபா அப்பா தைக்காவின் தலைவர் "மரக்கடை" சாமு நெய்னா பேசுகிறேன்.
பொது நல அமைப்புகள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்த எமது தைக்காவில் இடவசதி கேட்டு எமது பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரர் வேண்டுகோள் விடுத்தார். நல்ல விஷயம்தானே என்று கருதி அதற்கு அனுமதியளித்தோம்.
ஆனால், அது நமதூர் எல்லைக்குள் இயங்கி வரும் நச்சு ஆலை மறைமுகமாக நடத்தும் நிகழ்ச்சி என்பதை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் நேரில் விசாரித்த பின்னரே அறிந்துகொண்டோம். அதனையடுத்து உடனடியாக அந்த நிகழ்ச்சிக்கு இடவசதி அளிக்க நாங்கள் அளித்த அனுமதியை ரத்து செய்துவிட்டோம்.
நமதூர் மக்களுக்கு நன்மை செய்யவே இந்த தைக்கா என்னாளும் இயங்குமே தவிர, நம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலுக்கும் நாங்கள் இன்ஷா அல்லாஹ் ஒருபோதும் துணை நிற்க மாட்டோம் என்பதோடு, அவ்வாறு நடக்குமானால் அதை எதிர்த்துப் போராடுவதிலும் முன்னணியில் இருப்போம் என்று "நடப்பது என்ன?" குழுமத்தினராகிய உங்கள் அனைவரிடமும் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
அன்புடன்,
"மரக்கடை" சாமு நெய்னா
(தலைவர்: கலீஃபா அப்பா தைக்கா, கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்.)
28.06.2016. செவ்வாய்க்கிழமை @ 18:00 மணி.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, கலீஃபா அப்பா தைக்காவில், 29.06.2016. புதன்கிழமையன்று நடைபெறவிருந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. |