காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், பைக் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து முதியவர் காலமானார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், ‘கேப்டன்’ தர்வேஷ் முஹம்மத் என்பவர், தன் மனைவி, இரண்டு பெண் மக்களுடன் வசித்து வந்தார். திருப்பாலைக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், இலங்கை வரக்காப்பொல நகரில் நீண்ட காலம் வசித்த நிலையில், 1990ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினத்தில் வசித்து வந்தார்.
நேற்று (02.07.2016. சனிக்கிழமை) 20.00 மணியளவில், அருகிலிருக்கும் தப்லீக் மர்கஸ் பள்ளிவாசலில் ரமழான் சிறப்புத் தொழுகையில் கலந்துகொள்வதற்காக அவர் தன் வீட்டிலிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது, 18 வயது கூட நிறையாத இளைஞர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார் இரு சக்கர வாகனம், சுமார் 72 வயதாகும் அவர் மீது மோதவே, அவர் உடலிலிருந்து இரத்தம் அதிகளவில் வழிந்தோடி, நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், திருச்செந்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமானார்.
இன்று காலையில் அவரது உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கேயே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பின், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது உடல், எல்.எஃப். வீதியிலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அங்கு பொதுமக்கள் பார்வையிட்டதையடுத்து, 14.30 மணியளவில் - மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நல்லடக்கத்தில் காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்விபத்தில், மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கும் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆறுமுகநேரி காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
நிகழும் ரமழான் மாதத்தில், 18 வயது கூட நிரம்பாத இளைஞர்கள் மோட்டார் இரு சக்கர வாகனங்களில் இரண்டு, மூன்று, நான்கு பேர்களாக அமர்ந்துகொண்டு, சாலையோரங்களில் செல்வோரின் பாதுகாப்பு குறித்தோ, தமது பாதுகாப்பு குறித்தோ சிறிதும் கவலைப்படாமல் மிக வேகமாக ஓட்டிச் செல்வது வாடிக்கையாகிவிட்ட தற்காலச் சூழலில், இவ்விபத்து பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|