காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதன்போது, காயல்பட்டினம் நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் மற்றும் மார்க்க அறிஞர்களான ஆலிம்கள் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரமழான் 28ஆம் நாளில் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு நிகழ்ச்சி இன்று 17.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு - நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் முத்தவல்லிகளாகவும், நிர்வாகிகளாகவும் வாழ்ந்து மறைந்த முன்னோர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவரான எம்.எல்.எம்.முஹ்யித்தீன் நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் - காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றமைக்காக, அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரைப் பாராட்டி, விருது வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் ஏற்புரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், நோன்புக் கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டன.
நிகழ்வுகளனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 150 ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் உட்பட சுமார் 350 பேர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஒருங்கிணைப்பில், அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் செய்திருந்தனர்.
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டு குத்பா பெரிய பள்ளியில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |