500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்றும், அவற்றை 10.11.2016. முதல் 31.12.2016. நாளுக்குள் வங்கிகளில் கொடுத்து, மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 08.11.2016. அன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, 10.11.2016. வியாழக்கிழமை முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வங்கிகளிலும், ஏ.டீ.எம். தானியங்கி மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
காயல்பட்டினத்தின் அனைத்து வங்கிகளிலும், ஏ.டீ.எம். மையங்களிலும், அஞ்சல் அலுவலகத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
பிரதமரின் அறிவிப்பு வெளியான பின், வங்கிகள் செயல்படத் துவங்கி - மூன்றாவது நாளை அடைந்துவிட்டபோதிலும், வங்கிகளில் நுழைவாயில் மூடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வாடிக்கையாளர்கள் கொஞ்சங்கொஞ்சமாக உள்ளே அனுப்பப்பட்டு, பணப்பரிமாற்றத்திற்கு அனுதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றும் (12.11.2016. சனிக்கிழமை) நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த காட்சிகளைக் காண முடிந்தது. ஊரே ஓய்ந்திருக்கும் மதிய நேரத்தின்போது காயல்பட்டினத்தின் மூன்று வங்கிகளிலும், ஏ.டீ.எம். தானியங்கி மையங்களிலும் காணக்கிடைத்த - பொதுமக்கள் திரள் காட்சிகள்:-
500, 1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் (09.11.2016.) முதல், நகரில் 10, 20, 50, 100 ஆகிய சில்லறை பணத்தாள்களுக்கு கடும் கிராக்கி இருந்தது.
வாகனங்களுக்கு பெட்ரோல் போடச் சென்றால், “500 ரூபாய்க்கும் பெட்ரோல் போடுறதுன்னா போடுங்க! சில்லறையெல்லாம் தர இயலாது!” என்று கூறப்பட்டதாகவும்,
பலசரக்குக் கடைகளிலும், உணவகங்களிலும் வாங்கப்பட்ட / உட்கொள்ளப்பட்ட பொருட்களுக்கு சில்லறைத் தொகை இல்லையெனில் கடனாகக் கணக்கெழுதி, “அடுத்து வரும்போது சில்லறையாகப் பணத்தைத் தாருங்கள்!” என்று கடை உரிமையாளர்களால் கூறப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறினர்.
இந்நிலை காரணமாக நகரில் பணப்பரிமாற்றம் மிகவும் குறைந்து, 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கட்டுக்கட்டாக வைத்திருப்போரெல்லாம் - 10, 20, 50, 100 பணத்தாள்களை வைத்திருப்போரை புருவமுயர்த்தி வியப்புடன் நோக்கியது நகருக்குப் புதிய காட்சி.
இவற்றுக்கிடையே, நன்கு மழைபெய்து - சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், 09.11.2016. அன்று இரவில் காயல்பட்டினம் - ஸீ கஸ்டம்ஸ் சாலை - அல்ஜாமிஉல் அஸ்ஹர் முனையில் நகரின் ஒரு ‘குடி’மகன் கோபத்தில்,
“.............. (அச்சில் கோர்க்க இயலாத சொற்கள்) ஐநூறு ரூவா செல்லாதாம்... டாஸ்மாக்குல போயி ரூவாய குடுத்தா வாங்க மாட்டேங்குறான்! ............ய!”
என்று கூறியவாறு, தன் கையிலிருந்த 500 ரூபாய் பணத்தாளை, சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் வீசியெறிந்தார். அதைச் சரியான நேரத்தில் க்ளிக்கியவர் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அதை அனுப்பிவிட்டார்.
படங்களுள் உதவி:
K.S.முஹம்மத் ஷுஅய்ப் (ஃபேஸ்புக் வழியாக...) &
அஹ்மத் ஸாலிஹ் |