ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 18.11.2016. வெள்ளிக்கிழமையன்று துபை Zabeel Parkஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு, குலுக்கல் முறையில் தங்க நாணங்கள் பரிசளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நடத்திடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக நடத்தப்பட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டங்கள் குறித்து, அவ்வமைப்பின் செயலர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 18 வெள்ளியன்று ஸபீல் பார்க்கில் (Zabeel Park) பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு துபை காயல் நல மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு செயற்குழுக் கூட்டங்கள்:
இது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 07.10.2016, 28.10.2016, 05.11.2016 ஆகிய தேதிகளில் சிறப்பு செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.
அடுத்ததாக கடந்த 11.11.2016 வெள்ளியன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு மூத்த செயற்குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜி அவர்கள் தலைமை தாங்கினார். எம்.எஸ். அப்துல் ஹமீத் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, வாகனங்கள், நடத்தப்பட வேண்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டவற்றின் பின் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.
வழக்கமாக காயலர்கள் ஒன்றுகூடும் ஸஃபா பார்க்கில் Water Canal பணிகள் நடந்து வருவதால் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், ஜும்ஆவுக்கு போவதில் சிரமம் இருப்பதாலும் இந்த முறை ஸபீல் பார்க்கில் (Zabeel Park) பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் நடப்பது குறித்த அறிவிப்பை நமதூர் இணையதளங்கள் மூலமும், அலைபேசி குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும், வாட்ஸ்அப் மூலமும் அனைத்து அமீரக காயலர்களுக்கும் தெரியப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும் துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அமீரகவாழ் காயலர்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் நவம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் துபை ஸபீல் பூங்காவில் (Zabeel Park, Gate No. 3) காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஓன்றுகூடல், சாப்பாடு, சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியோர்களுக்கான வினாடி-வினா போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
வழமை போல் பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்கள் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் புடைசூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பித்துத் தருமாறு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். அத்தோடு நமது நல மன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும், விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் நடத்தப்பட அதிகமான தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் பொது தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 க்கு தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10.30 மணிக்குள் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்கு முன் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்குப் பின் வருவோருக்கும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்.
அதே போன்று தன்னார்வத் தொண்டர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதீனா லுலு சென்டருக்குப் பின்புறம் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக 8.30 மணிக்கு முதல் வாகனமும், 9.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும். இது சம்பந்தமாக சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 க்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபை காயல் நல மன்றம் சார்பாக - துபையிலிருந்து...
M.S.அப்துல் ஹமீத்
|