உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ரத்து
தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழக அரசு எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்கமுடியாது. அதேநேரம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவுகளை பின்பற்றி தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று அக்டோபர் மாதம் 4-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
தடைவிதிக்க மறுப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு கடந்த அக்டோபர் 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பின்னர், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தரப்புக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தள்ளிவைப்பு
அப்போது, தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 27 பக்கங்களை கொண்ட கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதனால் இந்த கூடுதல் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் எந்தந்த பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று விரிவான ஒரு மனுவை தயாரித்து, தமிழக அரசிடம் புகார் மனுவாக கொடுக்க உள்ளோம். எனவே, இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கவேண்டும்’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
தகவல்:
தினத்தந்தி |