குழந்தைகள் நாளை முன்னிட்டு, எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் திரையிடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பல்வேறு தலைப்புக்களில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும், நூலாய்வுகளும் அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு இன் வழமையான திரையிடல்களுடன் புதிய முயற்சியாக பள்ளி குழந்தைகளுக்கிடையே கலை இலக்கிய துறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த நவம்பர் 14 , 15 ஆம் தேதிகளில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இன் 12 வது நிகழ்வாக குழந்தைகளுக்கான திரையிடல் நடைபெற்றது.
இதில் உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் காலஞ்சென்ற அப்பாஸ் கியோரஸ்தமி இயக்கிய இரண்டு படங்கள் BREAD & ALLEY (https://www.youtube.com/watch?v=p23ExjSZUHY), THE CHORUS (https://www.youtube.com/watch?v=1qIjKsqONjM), மூன்று அமர்வுகளாக திரையிடப்பட்டது.
திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கியோரஸ்தமி
உலகின் முன்னோடி திரை இயக்குனர் பட்டியலில் வைத்து போற்றப்படும் அப்பாஸ் கியோரஸ்தமி 1940 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவர். சிறு வயதில் ஓவியம் வரைவதில் ஆர்வங்கொண்ட இவர் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கவின் கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு அவர் ஓவியம் , வரைகலை துறையில் பட்டை தீட்டப்பட்டார்.
வாழ்வாதரத்தை தேடுவதற்காக வணிக விளம்பரங்கள் , பதாகைகள் செய்து வந்தார். பின்னர் மெல்ல நகர்ந்து தொலைக்காட்சிக்கு சென்றவர் அப்படியே அவரின் சாதனை உலகமான திரைத்துறைக்குள் வந்து நிறைந்தார்.
திரைப்பட இயக்குனர் என்ற தகுதிக்கு அப்பால் ஓவியர் , திரைக்கதை எழுத்தாளர் , படத்தொகுப்பாளர் , வரைகலை வடிவமைப்பாளர் , கதை இயக்குனர் , கதை சொல்லி , கவிஞர் , ஒளிப்படக்கலைஞர் என அப்பாஸ் கியோரஸ்தமி பன்முகத் தன்மை கொண்டவர்.
முழு நீள திரைப்படங்கள் , குறும்படங்கள் , ஆவணப்படங்கள் என நாற்பது, திரைப்படங்கள் எடுத்துள்ளார். கீர்த்தி மிக்க கேன்ஸ் திரைப்பட விழா விருது உள்ளிட்ட உலகின் சிறந்த விருதுகளை பெற்றவர். பல உலக திரை விழாக்களுக்கும் போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியவர்.
1979 ஆம் ஆண்டு ஆயத்துல்லாஹ் கொமெய்னி தலைமையில் ஈரானில் நடந்த புரட்சியின் தொடர் விளைவுகள் திரைத்துறையிலும் எதிரொலித்தது. வன்முறையும் ஆபாசமும் தடை செய்யப்பட்டன. ஏராளமான திரைப்படங்களும் அவை சார்ந்த நிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த புதிய அறைகூவல்களை எதிர் கொள்ள முடியாமல் நிறைய ஈரானிய திரை இயக்குனர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்.
ஆனால் அப்பாஸ் கியோரஸ்தமி , எனது வேர்கள் எங்கு பதிந்துள்ளனவோ அங்குதான் நான் செழிக்க முடியும். இந்த மண்ணை விட்டு விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்” என்ற உறுதியுடன் பணியாற்றத் தொடங்கினார். குழந்தைகளையும் முதியவர்களையும் வைத்து தனக்கே உரிய புதிய பாணியில் படமெடுக்கத் தொடங்கினார்.
1960களில் பாரசீக திரையுலகில் தொடங்கிய ஈரானிய புதிய அலை திரைபடைப்பாளர்களின் தலைமுறையைச் சார்ந்தவர் அப்பாஸ் கியோரஸ்தமி. அதன் நீட்சியாக அவரின் படைப்புக்களில் தொடர் உருவக கதை சொல்லும் பாணியையும் கவித்துவ வசனங்களையும் அரசியல் , தத்துவ இழையோட்டத்தையும் , வாழ்வு, இறப்பு மீதான உசாவலையும் காண முடியும்.
தனது கலை வலிமையால் நெருக்கடியை உடன்பாட்டு ஆற்றலாக கியோரஸ்தமி மாற்றியதன் விளைவாக புதிய பாட்டை திறந்தது .
அதன் பிறகு கலையின் உன்னத சாத்தியப்பாடுகளை திறந்து கொண்டே செல்லும் பல புதிய ஈரானிய திரை இயக்குனர்கள் இன்று வரை உலக விருதிற்கு தகுதியான திரைப்படங்களை தொடர்ந்து படைத்தளிக்கின்றனர்.
அப்பாஸ் கியோரஸ்தமி தனது 76 வயதில் ஜூலை 04 , 2016 ஆம் தேதி காலமெனும் முடிவற்ற வெளிக்குள் அமிழ்ந்து விட்டார்.
Bread and Alley & The Chorus – திரைப்படங்கள்
Bread and Alley --- அப்பாஸ் கியோரஸ்தமியின் முதல் திரைப்படைப்பு.
1970 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த கறுப்பு வெள்ளை படத்தை ஒற்றைத் தொடர் காட்சியாக எடுக்க அவர் நாற்பது நாட்கள் சலிக்காத தொடர் உழைப்பை\ கொடுக்க வேண்டி வந்தது.
மனிதனுக்கும் விலங்குக்குமான முரணில் விலங்கு கீழடங்குகின்றது.
பின்னர் முரண் மீண்டும் தொடர்வதுவுமான முரண் இணைவின் முடிவற்ற களியாட்டமானது நாய் X சிறுவன் பாத்திரங்கள் வழியாக வெளிப்படுகின்றது. வெளி உதவிக்கான சாத்தியங்கள் இற்று விழும்போது நெருக்கடிகளை தனியே எதிர்கொள்ளும் திறன் மனிதனின் அகத்திலிருந்தே மலர்வதையும் சொல்லிச் செல்லும் படமிது.
The Chorus --- 17 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 1982 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் புலன்கள் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை அதை இழக்கும்போது மட்டுமே உணர முடியும்.
செவிப்புலனை இழந்த ஒரு முதியவருக்கு காது கேட்கும் கருவி உதவிகரமாக இருந்தாலும் பல கட்டங்களில் அந்த ஓசையே பெருஞ் சல்லியமாக மாறுகின்றது.
ஓசையை உணர முடியாத ஒரு அவலத்தின் வழியாக மௌனத்தின் அமைதியின் ஒலியின்மையின் உன்னதம் உணர்த்தப்படும் ஒரு முரண் இயக்கத்தில் இப்படம் நல்லதொரு கலைப்படைப்பாக நிற்கின்றது.
வேக கதியில் இயங்கும் குதிரை வண்டிக்காரன் , ஒலிச்சவறுகளால் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும் கடை வீதி , எதுவுமே எழுதப்படாமல் வெண் பலகையாய் இருக்கும் குழந்தைகளின் உற்சாக உலகம் என மூன்று வகையான உலகுடன் ஒத்திசைய இயலாமல் தனித்தீவாக நிற்கும் முதியவரின் ஒலி நீக்கம் செய்யப்பட்ட உலகம்.
இவ்வாறாக ஒரு பூகோளத்தில் பல உலகங்கள் தனித்தியங்கும் பருண்மையையும் இப்படத்தில் காண முடியும்.
`````````````````````````````````````````````````````````````````````
இந்த நிகழ்வுகளில் ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் 127 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ மாணவியருடன் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
திரையிடலுக்கான ஏற்பாடுகளை முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியின் இணைச் செயலாளர் கே.எம்,டி. ஸுலைமான் , இயக்குனர் ரத்தினசாமி , நிர்வாக அலுவலர் ஷேக் , உடற்கல்வி ஆசிரியர் றப்பானி ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|