நடப்பாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி முடித்துத் திரும்பியோர், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமையாசிரியை, பொறுப்பை நிறைவு செய்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆகியோருக்கு, காயல்பட்டினம் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. திரளான மகளிர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
நடப்பாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி முடித்துத் திரும்பியுள்ள - எமது மஜ்லிஸுன் நிஸ்வான் உறுப்பினர்களான ஹாஜ்ஜா ஜீனத், ஹாஜ்ஜா ஜைத்தூன்,
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாகப் பதவி உயர் பெற்றுள்ள - எம் பகுதியைச் சேர்ந்த பீர் ஃபாத்திமா,
“பொதுவாழ்வில் நேர்மை” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, தனது நகர்மன்றத் தலைவர் பொறுப்பை முழு நேர்மையுடன் நிறைவு செய்துள்ள - எம் மத்ரஸாவின் முன்னாள் மாணவியும், நடப்பு உறுப்பினருமான காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆகியோரைப் பாராட்டும் வகையில், காயல்பட்டினம் - மகுதூம் தெரு மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் பாராட்டு & வரவேற்பு விழா 08.11.2016. செவ்வாய்க்கிழமையன்று, 17.00 மணியளவில் மஜ்லிஸுன் நிஸ்வான் மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
கிராஅத், இறைவாழ்த்துப்பாவைத் தொடர்ந்து, பாராட்டுக்குரிய சிறப்பு விருந்தினர்களை - முன்னிலை வகித்த மன்றத்தின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். கவிதை, வாழ்த்துரை, வாழ்த்துப் பாடல் ஆகியன மன்றத்தின் ஆசிரியையரால் நிகழ்த்தப்பட்டன. பின்னர், சிறப்பு விருந்தினர்கள் ஏற்புரையாற்றினர்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேசுகையில், தன் நேர்மையான பொதுவாழ்விற்கு - தன் பிஞ்சுப் பருவத்திலேயே இம்மத்ரஸாவில் பயிற்றுவிக்கப்பட்ட நல்லொழுக்கப் பயிற்சியும் முக்கிய காரணம் என்று கூறி, தனது முன்னாள் ஆசிரியையரை நினைவுகூர்ந்தார்.
அடுத்து பேசிய - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை பீர் ஃபாத்திமா, இம்மத்ரஸாவின் செயல்பாடுகள் தன்னைப் பெரிதும் மகிழ்விப்பதாகவும், இங்கு பயின்று வரும் நிலையில் சுபைதா மகளிர் பள்ளியில் பயில வரும் மாணவியரின் கீழ்ப்படியும் பண்பு தனித்துவத்துடன் விளங்குவதோடு, தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வாழ்த்தி சால்வை அணிவிக்கப்பட்டதுடன், வாழ்த்து மடலும் வழங்கப்பட்டது.
நன்றியுரை, ஃபாத்திஹா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதில், மத்ரஸா சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மகளிர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
MOFA MALIK
|