ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் 01.10.2016. அன்று நடைபெற்று முடிந்துள்ளன. மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் துணைத் தலைவர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பதினான்காவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, மார்டன் மாநகரில் அமைந்துள்ள கிராம சமுதாய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்டத்திற்கு மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைதலைவர் ஹாபில் அப்துல் மத்தீன் லபீப் முன்னிலை வகித்து வந்தோரை வாழ்த்தி வரவேற்றார். மன்றத்தின் துணைதலைவர் ஹாபில் அப்துல் மத்தீன் லபீப் அவர்களின் புதல்வி பாத்திமா கிராஅத் ஓதி பொதுகூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைவர் உரை:
பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், மேலும் மன்றம் ஆற்ற வேண்டிய பணிகளை மிக அழகுடன் விளக்கினார்கள்.
துணை தலைவர் உரை:
பின்னர் மன்ற துணைத்தலைவர் ஹாபிழ் அப்துல் மத்தீன் லபிப் அவர்கள் நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள்.
செயலாளர் உரை:
பின்னர் மன்றத்தின் செயலாளர் டாக்டர் அபு தம்பி அவர்கள் மன்றம் நடத்தும் பணிகளின் தரத்தின் அவசியத்தை விளக்கினார்கள். மேலும் நமதூர் நகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அதை மேம்படுத்துவது முறைகள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதகதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார். மன்றத்தின் சந்தாவை அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பல செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.
கலந்துரையாடல்:
பின்னர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையே திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பிறகு மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.
மரபுச்சொல் மற்றும் வினாடி-வினா போட்டி:
சிறார்களின் நிகழ்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.
தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது.
இப்பொதுக்குழுவின் ஏற்பாடுகளை மன்றத்தின் உறுப்பினர் அபுல் ஹசன் அவர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1:
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு, இப்பொதுக்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றது.
தீர்மானம் 2:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு (2015-2016) கணக்கறிக்கையை இப்பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிகின்றது.
தீர்மானம் 3:
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதென தீர்மானிக்ப்பட்டது. தேதி மற்றும் நிகழ்விடம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
தீர்மானம் 4:
மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை, காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு கடிதமாக அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மன்ற உறுப்பினர்களின் துவாவுடன் நிகழ்சிகள் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|