வங்கி, அஞ்சல் நிலையங்கள் ஆகிய இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
வங்கிகளில் ரூ.4,500 வரை பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை இனி மாற்றிக் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.4 ஆயிரம் மட்டுமே மாற்றிக் கொள்ளும்படியாக இருந்தது.
இதேபோல், ஏடிஎம்களில் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் ரூ.2,000 வரை மட்டுமே எடுக்க முடியும். அதற்கான உச்ச வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், திங்கள்கிழமையிலிருந்து சீர்செய்யப்பட்ட (recalibrated) ஏடிஎம் மையங்களிலிருந்தும் 2,500 ரூபாயை வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சீர்செய்யப்படாத ஏடிஎம் மையங்களிலிருந்து 2,000 ரூபாய் (50, 100 ரூபாய் நோட்டுகள்) மட்டும் வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளில் இருந்து வாரத்துக்கு இனி ரூ.24,000 வரை வாடிக்கையாளர்களால் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த முறையில் தினமும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற முடியும் என்று விதிமுறை இருந்தது. அந்த விதிமுறையும் ஞாயிற்றுக்கிழமையுடன் நீக்கப்பட்டுவிட்டது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நவம்பர் 10-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை ரூ.3 லட்சம் கோடி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் ரூ.50,000 கோடியை தங்கள் கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளனர்.
கடந்த 4 தினங்களில் ஒட்டுமொத்தமாக 21 கோடி பணப்பரிவர்த்தனைகளை வங்கிகள் மேற்கொண்டிருக்கின்றன.
மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியாக வரிசை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூ.500 நோட்டுகள் வெளியீடு: இதனிடையே, அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன என்று மத்திய நிதி அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
தகவல்:
தினமணி, ரிசர்வ் வாங்கி இணையதளங்கள் |