காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அதன் புதிய அலுவலகத்தை – பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெற்றிடத்தில் அமைத்துத் தருமாறு அரசின் பல்வேறு துறைகளிடமும் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்ந்து கோரி வருகிறது. அவ்விடத்தைப் பார்வையிட வருமாறு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அக்குழுமம் நேற்று மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பேருந்து நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு தேவையான காலியிடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!
60 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த காயல்பட்டினம் தபால் நிலையம், தற்போது புதிய இடம் தேடி வருகிறது. பொருத்தமான புதிய இடம் - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகம் என முடிவு செய்து - தபால்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக, நகராட்சியிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இருப்பினும் இது சம்பந்தமாக எவ்வித முன்னேற்றம் இல்லாததை தொடர்ந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி - நடப்பது என்ன? குழுமம் மூலமாக - நகரின் பொது மக்கள், அனைத்து ஜமாத்துக்கள், கோவில் - தேவாலயங்கள் ஆகியவற்றிடம் இருந்து கையெழுத்து பெற்று, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், மனு சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மூலமாகவும் இதனை வலியுறுத்த நடப்பது என்ன? குழுமம் கோரியது.
தபால்துறை மூலமாக கோரிக்கை முறையாக கிடைக்கபெற்றப்பின் இது சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்ததை அடுத்து, தபால் துறை மீண்டும் இது சம்பந்தமான கோரிக்கையை - நகராட்சிக்கு வழங்கியுள்ளது. நகல் இணைக்கப்பட்டுள்ளது.
போதிய இடம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ளது என்பதை வரைப்படத்துடன் எடுத்துரைத்து, தபால்துறை கோரிக்கை கடிதத்தையும் இணைத்து, பேருந்து நிலைய வளாகத்தை - மாவட்ட ஆட்சியரை நேரில் பார்வையிட கோரி - இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 4, 2017; 6:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|