காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள சாகைளை சரி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முறைப்படியான வேகத்தடைகளை அமைத்திடவும், சாலைகளில் திரண்டுள்ள மணற்திட்டுகளை அகற்றிடவும் நகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை, பல இடங்களில் பெருத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. கே.டி.எம். தெரு, பிரதான சாலைகளின் பல பகுதிகளில் இந்த சேதத்தை காண முடிகிறது.
மேலும் - அல்ஜாமியுல் அஜ்ஹர் சந்திப்பில், சாலைக்கு நடுவே போடப்பட்டுள்ள குழாய் வெளியில் தெரியும் அளவில் சேதம் உள்ளது. இதனால் அப்பகுதியை கடக்கும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
இது தவிர - அதிக வாகனங்கள் செல்லும் இந்நெடுஞ்சாலையில், மணல் - அதிகமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மணல் குவியலை அகற்றிட ஆட்சியர் அறிவுறுத்தியப்பிறகும், காயல்பட்டினத்தில் மணல் அப்புறப்படுத்தப்படவில்லை.
தாயிம்பள்ளி அருகில் கூடுதலாக ஒரு RUMBLE STRIPS ஸ்பீட் பிரேக்கர் மற்றும் ஷைக் ஹுசைன் பள்ளி அருகில் புதிதாக RUMBLE STRIPS ஸ்பீட் பிரேக்கர் நிறுவிட நடப்பது என்ன? குழுமத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, நெடுஞ்சாலைத்துறை உறுதி அளித்ததது. ஆனால் இது வரை அப்பணிகள் நிறைவுபெறவில்லை.
மஹாத்மா காந்தி வளைவுக்கு அருகில் இருந்த ஊர் பெயர் பலகையும் இது வரை புதுப்பிக்கப்பட்டு - மீண்டும் நிறுவப்படவில்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (செப்டம்பர் 4) - மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 5, 2017; 12:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|