காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக. நகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் நிரப்பப்படாமலும், முறையாக சுத்தம் செய்யப்படாமலும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் புகார் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரை, பேருந்து நிலையம், சந்தை, மருத்துவமனை உட்பட காயல்பட்டினம் நகராட்சியின் மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் - நகராட்சி சார்பாக குடிநீர் தொட்டிகள் அண்மையில் நிறுவப்பட்டன.
பல ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இத்தொட்டிகளில் - நகராட்சி ஊழியர்களால், குடிநீர் நிரப்பப்படுவதில்லை; வெறும் காட்சி பொருட்களாக அவை இருந்து வருகின்றன. மேலும் - இத்தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதுமில்லை.
இது குறித்து பல முறை ஆணையர், மேலாளர் ஆகியோரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டால், புகார் தெரிவிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மட்டும், புகார் தெரிவிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து நிரப்பப்படும். இது சம்பந்தமாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் தொடர்ந்து புகார்கள் செய்தும், முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் - நேற்று (செப்டம்பர் 4) நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அலுவலர் - கூட்டத்தில் கலந்துக்கொண்ட நகராட்சி ஊழியரிடம் இது சம்பந்தமாக வினவினார். மேலும் - முறையாக குடிநீர் நிரப்பப்படவேண்டும், எப்போது சுத்தம் செய்யப்படுகிறது என்ற தகவல் பலகை, ஒவ்வொரு குடிநீர் தொட்டியிலும் நிறுவப்படவேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 5, 2017; 6:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |