SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடிக்கு வரும் தமிழக முதல்வர், படுகொலை செய்யப்பட்ட மீராத்ததம்பி குடும்பத்தைச் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி வரும் தமிழக முதலவர் அவர்கள், கொலை செய்யப்பட மீராத்தம்பி குடும்பத்தை சந்தித்து, நிவாரணத்தொகை வழங்கவேண்டும்!
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சார்ந்த - 34 வயது நிரம்பிய மீராத்தம்பி – கடந்த ஆகஸ்ட் 26 சனிக்கிழமையன்று, தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டார். SRM பேருந்தில் சென்னை வரை பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த மீராதம்பியை, தூத்துக்குடி வரை பயணம் செய்ய திருச்செந்தூரில் குடிபோதையில் ஏறிய இருவர் கொலை செய்துள்ளனர். அவ்விருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களுள் ஒருவருக்கு வயது 19.
21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதி மீறப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 விதிமுறைகளை மீறி - SRM நிறுவனம், இருவரை பேருந்தில் ஏற்றியுள்ளது.
இந்தக் கொலை காரணமாக, அக்குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் தரப்பிலும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் உட்பட பொதுநல அமைப்புகள் சார்பிலும், அக்குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் - கொலை நடந்து 9 நாட்களாகியும் இதுவரை எவ்வித நிவாரணமும் அக்குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. எனவே - அரசு விழாவிற்காக, செப்டம்பர் 07 அன்று தூத்துக்குடி வரவுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் - மீராத்தம்பி குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களின் குடும்பத்திற்கு கணிசமான தொகையை நிவாரணமாக வழங்கிடக் கோரியும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக – இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இவண்,
பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ்,
ஒருங்கிணைப்பாளர், நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
அலைபேசி: 90802 12749
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|