காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் – சரிந்த நிலையில் உள்ள மின் கம்பம் ஒன்று – பலமுறை புகார் தெரிவித்த பின்னரும் - கடந்த ஒன்றரை மாத காலமாக சரி செய்யப்படாமலேயே உள்ளது. இது தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடந்த ஜூலை 21 அன்று அடித்த பெருங்காற்றில் - மரம் சாய்ந்ததால், சாலையோரம் இருந்த மின் கம்பம் ஒன்று சொளுக்கார் தெருவில் சாய்ந்தது. மின் இணைப்பு சில மணி நேரங்கள் கழித்து வழங்கப்பட்டாலும், சாய்ந்த மின் கம்பம் - இன்றுவரை சரி செய்யப்படவில்லை.
[படங்கள்: கோப்பு]
அக்கம்பம் மூலம் இணைப்புபெறும் வாடிக்கையாளர்கள் - இது சம்பந்தமாக, காயல்பட்டினம் மின் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து நடப்பது என்ன? குழுமம் வாயிலாக - ஜூலை 28 அன்று புகார் வழங்கப்பட்டது. அதன்பிறகும், மின் வாரியத்தில் இருந்து முறையான பதில் இல்லை.
இம்மின்கம்பம் வாடிக்கையாளர்களால் நிறுவப்பட்டது என்றும், அவர்கள் செலவிலேயே இதனை சரி செய்யவேண்டும் என்றும் வாய்மூலமாக - காயல்பட்டினம் மின்நிலைய இளநிலை பொறியாளர் திரு முருகன் தெரிவித்தார்.
அரசின் எந்த விதிமுறைப்படி, பொதுமக்கள் - தங்கள் சொந்த செலவில், தெருவில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பத்தை சரி செய்யவேண்டும் என தெரிவிக்க கோரியும் இது வரை, திரு முருகன் பதில் வழங்கவில்லை.
ஆபத்தான நிலையில் தொடர்ந்து இருக்கும் மின் கம்பத்தை சரி செய்யக்கோரியும், பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்புரிந்து வரும் திரு முருகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் - நேற்று (செப்டம்பர் 4) மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 5, 2017; 11:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |