காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
05.01.2018. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அன்று 14.30 மணியளவில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் திரட்சியுடன், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் – ஆணையர் பொன்னம்பலத்திடம் – ஆட்சேபனைக் கடிதம் கையளிக்கப்பட்டது.
கடித வாசகம் வருமாறு:-
04-01-2017
பெறுநர்:
உயர்திரு. வார்டு மறுவரையறை அலுவலர் அவர்கள்,
நகராட்சி ஆணையர்
காயல்பட்டணம்.
ஐயா,
பொருள் :
அண்மையில் வெளியிடபட்டுள்ள காயல்பட்டணம் நகராட்சிக்குரிய வார்டு மறுவரையறை பட்டியலை
ஆட்சேபிப்பது சம்பந்தமாக........
காயல்பட்டணம் நகராட்சிக்கான வார்டு மறுவரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலுக்கு காயல் பட்டணம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆட்சேபனைகள் உள்ளன.
எங்கள் ஊர் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த மறுவரையறை செய்யப் பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஊர் மக்களின் கருத்தை அறிந்து, நீண்ட ஆய்வுக்கு பின்னும், பரிசீலனைக்கு பின்னும் கீழ்கண்டபடி எங்களது ஆட்சேபணைகளை சமர்பிக்கின்றோம்.
ஆட்சேபணைகள் :
1. காயல்பட்டணம் நகராட்சிக்குரிய வார்டுகள் மறுவரையறை பட்டியலில் வார்டுகளின் எண்ணிக் கையை அதிகரித்து அறிவிக்காத நிலையில், வார்டுகளின் அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களின் கருத்தாகும்.
2. மறுவரைவு பட்டியலில் புதிதாக அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அமைப்பில் அதிகமான குளறுபடிகள் இருக்கின்றன.
(அ) இதற்கு முன்னர் இந்நகரின் சதுக்கைத் தெருவின் பெரும் பகுதி இரண்டாவது வார்டு என்ற பெயரில் முழுமையான ஒரு வார்டாக திகழ்ந்தது.
* அத்தெருவின் எஞ்சிய பகுதி 4வது வார்டு என்ற பெயரில் அருகில் ஒட்டியிருந்த வார்டில் இணைக்கப்பட்டிருந்தது.*
தற்போது அத்தெருவை மூன்றாக பிரித்து, ஒரு பிரிவை சதுக்கை தெருவோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத, தொலைவில் உள்ள மற்றொரு வார்டோடு இணைத்து வரையறை பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குழப்பமான அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வார்டு எண் 13 ஆகும்.
ஆ) முந்தய வார்டு எண் 13-ல் இடம்பெற்ற ஒருபகுதி லோக்கல் ஃபண்ட் என்று அழைக்கப்படும் LF ரோடு ஆகும்.
இந்த சாலை முழுவதும் முற்குறிப்பிட்ட 13 வது வார்டுலேயே இதுவரை இருந்து வந்தது.
ஆனால் தற்போது மறுவரையறையில் அந்த குறிப்பிட்ட தெரு, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று வெவ்வேறு வார்டுகளில் இணைக்கப் பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், சிரமங்களும் உருவாகும்.
இதுபோன்ற குழப்பங்களும், குளறுபடிகளும் தற்போதைய மறுவரையறை அறிவிப்பில் பல வார்டுகளில் இடம் பெற்றுள்ளது.
3.காயல்பட்டணம் நகரில் பெரும்பான்மையாக வாழும், சிறுபாண்மை சமுதாயமான முஸ்லிம்களுக்கு இதுவரை கிடைத்து வந்த பிரதி நிதித்துவம் வெகுவாக குறையும் வகையில், வார்டுகளின் மறுவரையறை அமைந்துள்ளது.
இந்த ஊரைச் சுற்றி உள்ள எந்த ஊரிலும் முஸ்லிம் சிறுபாண்மை சமூகத்தினர் பிரதிநிதிகளாக வர வாய்ப்பில்லை.
இவ்வூரில் மட்டுமே கிடைக்கும் அந்த வாய்பையும் தடுக்கும் விதத்தில் இந்தமறுவரையறை அமைந்துள்ளது.
* 4. இப்போது அறிவிக்கப் பட்டுள்ள மறுவரையறையை உருவாக்கும்போது இவ்வூரின் சமூக சூழ்நிலைகள், எல்லை வரையறை, நகராட்சி உறுப்பினர் எளிதாக சேவையாற்றும் வாய்ப்புகள், இவை ஏதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளபடவில்லை என்றே தெரியவருகிறது.*
மேலும் இந்த ஊர் மக்களின் உணர்வுகளை மதிக்காமலும், அரசின் வழிக்காட்டல் முறையை பேணாமலும், அவசர கோலத்தில் இந்த வரையறை செய்யப் பட்டிருப்பதாகவே கருதுகிறோம்.
* எனவே இக்குறைபாடுகளை நீக்க மேற்குறிப்பிட்டுள்ள எங்களது ஆட்சேபணைகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.*
இந்நகரில் ஏற்கனவே உள்ள 18 வார்டுகளின் எண்ணிக் கையை உயர்த்தப்படாத நிலையில் முந்தய வார்டு அமைப்பையே தொடர வேண்டுகிறோம்.
அல்லது அவசியபடின், ஊர்மக்களின் கருத்தை அறிந்து உருவாக்கப்பட்டு, தங்களின் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வரைவு பட்டியலை ஏற்று அறிவிக்குமாறு வழியுறுத்தி வேண்டுகிறோம்.
ஊர் மக்களின் சார்பில் எங்கள் பேரவையின் மூலம் வழங்கும் இக்கோரிகைகளை தயவு கூர்ந்து ஏற்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
* தங்கள் உண்மையுள்ள,*
தலைவர் மற்றும் செயலாளர்
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை.
இணைப்பு:
ஊர் மக்களின் சார்பில் உருவாக்கப்பட்ட மாதிரி வரைவு பட்டியல்
நகல் :
1. உயர்திரு. தலைவர் அவர்கள், மறுவரையறை ஆணையம்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சென்னை.
2. உயர்திரு,
மாவட்ட மறுவரையறை அதிகாரி அவர்கள்,
மாவட்ட. ஆட்சியர்– தூத்துக்குடி
|