காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் - தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் 2ஆவது ஆட்சேபனைக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
*காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 05க்கு முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் – மாவட்ட மறுவரையறை அலுவலரான மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்புப் பட்டியல் இருப்பதால், தற்போதைய நிலையில் - அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என விரிவான ஆட்சேபனை கடிதம் 02.01.2018. செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு ப.பொன்னம்பலத்திடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகளால் நேரில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, மறுவரையறை ஆணையத்தின் தலைவரான - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கும், மாவட்ட மறுவரையறை அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் பதிவு அஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை –தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியலின் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு. பொன்னம்பலத்திடம் இரண்டாவது முறையாக இன்று (04.01.2018. வியாழக்கிழமை) நண்பகல் 12.30 மணிக்கு – ஆட்சேபனைக் கடிதம் நேரில் அளிக்கப்பட்டுள்ளது.
கடித வாசகம் வருமாறு:-
பெறுநர்
(1) தலைவர், மறுவரையறை ஆணையம் /
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், சென்னை.
(2) மாவட்ட மறுவரையறை அதிகாரி /
மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி.
(3) வார்டு மறுவரையறை அலுவலர் /
ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி.
ஐயா,
பொருள்:- காயல்பட்டினம் நகராட்சி - தவறான அடிப்படை ஆவணங்கள் - வரைவு மறுவரையறை வார்டுகள் விபரம் - ஆட்சேபனை - குறித்து
பார்வை:-
(1) எமது 2-1-2018 தேதிய - காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) நகராட்சி வரைவு வார்டுகள் பட்டியல் சம்பந்தமான ஆட்சேபனை கடிதம்
பார்வை 1 இல் காணும் எமது மனுவில் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம் குறித்த எமது ஆட்சேபனைகளை பதிவு செய்திருந்தோம்.
அதில் - மறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போதுள்ள நிலையில் - காயல்பட்டினம் நகராட்சிக்கான மறுவரையறை வார்டு விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை தெரிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக - கீழ்க்காணும் ஆட்சேபனைகளையும் பதிவு செய்கிறோம்.
மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி [(6)(f)] - ஒரு பகுதியின் மக்கள்தொகை விபரங்கள் இல்லாத பட்சத்தில் - அந்த பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் - அடிப்படையில், மறுவரையறை மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆனால் - வரைவு வார்டுகள் விபரங்கள் தயாரிக்க - காயல்பட்டினம் நகராட்சி, இறுதியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை (CENSUS) விபரங்களை அடிப்படையாக கொள்ளாமல், மார்ச் 2017 வரையிலான வீட்டு தீர்வை விபரங்களை அடிப்படையாக கொண்டு, மக்கள் தொகையை கணித்துள்ளது. இது - மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்றமான செயலாகும்.
மறுசீரமைக்கப்பட்ட வார்டு விபரங்களை தயாரிக்க - காயல்பட்டினம் நகராட்சி பயன்படுத்திய, வீட்டு தீர்வைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் 2(d) என்ற இணைப்பாகவும், தமிழில் 2(ஈ) என்ற இணைப்பாகவும் இந்த விபரங்கள், மறுவரையறை அறிக்கையுடன் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த இணைப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்கள், இடம்பெறாத விபரங்கள் - காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டுள்ள வார்டுகள் பட்டியலின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது.
(1) புதிய வார்டு 1 இல் அமைந்துள்ள உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்புகள் எண்ணிக்கை - 346 என்று ஆங்கில இணைப்பும், 154 என்று தமிழ் இணைப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கிறது.
(2) புதிய வார்டு 3 இல் அமைந்துள்ள கீழநெய்னார் தெரு - 1 உடைய கதவு எண்கள், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும், தமிழில் வேறு மாதிரியும் உள்ளது
(3) புதிய வார்டு 7 இல் அமைந்துள்ள குளம் சாஹிப் தோட்டம் உடைய கதவு எண்கள், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும், தமிழில் வேறு மாதிரியும் உள்ளது
(4) புதிய வார்டு 8 இல் அமைந்துள்ள சீதக்காதி நகர் உள்ள குடியிருப்புகள் எண்ணிக்கை - 281 என்று ஆங்கில இணைப்பும், 251 என்று தமிழ் இணைப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கிறது. மேலும் - அவற்றில் இடம்பெற்றுள்ள, கதவு எண்களும், இரு மொழிகளில், முரண்படுகின்றது.
(5) புதிய வார்டு 10 இல் அமைந்துள்ள வாணியக்குடி தெரு உடைய கதவு எண்கள், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும், தமிழில் வேறு மாதிரியும் உள்ளது
(6) புதிய வார்டு 11 இல் எல்.எப்.சாலைக்கான கதவு எண்கள் விபரம் - இரு மொழிகளிலும் – வழங்கப்படவில்லை
(7) புதிய வார்டு 16 இல் வண்ணாக்குடி கடை தெரு கதவு எண்கள் உடைய கதவு எண்கள், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும், தமிழில் வேறு மாதிரியும் உள்ளது
காயல்பட்டினம் நகராட்சி தற்போது வெளியிட்டுள்ள வரைவு வார்டுகள் பட்டியல் - நகராட்சியுடைய வீட்டுதீர்வைகள் விபரங்களை - முழுமையாக - அடிப்படையாக கொண்டுள்ளது. மேலே - விபரத்துள்ள குளறுபடிகள், மேலோட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும். இந்த குளறுபடிகள் - நகராட்சி வெளியிட்டுள்ள வார்டுகள் விபரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் - வரைவு ஆவணம் தயாரிப்பில், தங்கள் முழு மனதை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் செலுத்தவில்லை (NON-APPLICATION OF MIND) என்பதும் இதில் இருந்து தெளிவாகிறது.
எனவே - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கான, மாதிரி வரைவு வரைமுறையை நிறுத்திவைத்து, பொதுமக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின், பொது நல அமைப்புகளின் பரிந்துரைகளை முறையாக பெற்று, திருத்திய, வரைமுறை செய்யப்பட்ட காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் விபரத்தை தயாரித்து, வெளியிட வார்டு வரைமுறை அலுவலர் / காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையருக்கு உத்தரவிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
*‘நடப்பது என்ன?’ சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 04, 2018; 14:15 pm]
[#NEPR/2018010401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|