காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுசீரமைப்பு தொடர்பாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் அனைத்தையும் மறுவரையறை செய்ய - செப்டம்பர் மாதம், தமிழக அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து - வரைவு (DRAFT) வார்டு விபரங்கள் - சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 4க்கு முன்னர் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதனை கருத்தில் கொண்டு – இன்று (1-1-2018) காலை - இறைவனின் உதவியுடன் - இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில், துஃபைல் வணிக வளாக, ஹனியா சிற்றரங்கில் நடந்தது.
காலை 10:30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிகளை சகோதரர் E.அஹமத் சுலைமான் நெறிப்படுத்தினார்.
துவக்கமாக - இறைமறையில் இருந்து வசனங்களை ஹாபிழ் M.A.C.முஜாஹித் ஓத, தொடர்ந்து - சகோதரர் M.N. அஹமத் சாஹிப், வார்டுகள் மறுசீரமைப்பு குறித்த அறிமுக உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, சகோதரர் M.W.ஹாமீது ரிஃபாய் - வார்டுகள் மறுசீரமைப்பு குறித்த விரிவான விளக்கங்களை கணினி மூலம் வழங்கினார்.
அவரின் விரிவான உரையில் - வார்டு சீரமைப்பு குறித்து அரசு வெளியிட்ட சட்டங்கள் குறித்த விளக்கங்கள், எவ்வாறு புதிய வார்டுகள் அமையப்பெற்றுள்ளன, அதில் உள்ள பிரச்சனைகள், எவ்வாறு புதிய வார்டுகளில் உள்ள குறைபாடுகளை கலையலாம் என்பதற்கான பரிந்துரைகள் ஆகியவை அடங்கியிருந்தன.
நகராட்சி மூலம் வெளியிடப்பட்டுள்ள வார்டுகள் சீரமைப்பு விபரங்களும், நடப்பது என்ன? குழுமம் பரிந்துரைக்கும் மாற்றங்கள் அடங்கிய விபரங்களும் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - கருத்து பரிமாற்றம் துவங்கியது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள், தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
வார்டுகள் சீரமைப்பில் உள்ள குறைப்பாடுகள் குறித்தும், அதில் மாற்றங்கள் கோரியும் - சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுப்பதென்ன நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை MEGA அமைப்பின் தலைவர் சகோதரர் சதக்கத்துல்லாஹ் வாசித்தார்.
சகோதரர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உடைய நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 1, 2018; 8:30 pm]
[#NEPR/2018010101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|