வார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க, கூடுதல் கால அவகாசம் தரப்பட வேண்டும் என, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மறுவரையறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிமன்றங்கள் அனைத்தின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, அது சம்பந்தமான வரைவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கவும், ஆட்சேபனைகள் தெரிவிக்கவும் - ஒரு வார காலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசம் போதாது என்றும், கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மறுவரையறை ஆணையத்தின் தலைவர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்), மாவட்ட மறுவரையறை அதிகாரி (ஆட்சியர்) மற்றும் வார்டு மறுவரையறை அலுவலர் (நகராட்சி ஆணையர்) ஆகியோருக்கு - மனு வழங்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மறுவரையறை செய்யப்பட்டுள்ள உள்ளாட்சிமன்றங்களுக்கான வார்டுகள் விபரம் - டிசம்பர் 27 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது என செய்திகள் மூலம் அறிந்தோம். இதன் விபரங்களை - பொது மக்கள், அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் பார்வையிட்டு தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒரு வார காலம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.
காயல்பட்டினம் நகராட்சியை பொறுத்தவரை - இந்த விபரங்கள், டிசம்பர் 30 (சனிக்கிழமை) அன்றே வெளியிடப்பட்டன. ஜனவரி 4 க்கு (வியாழக்கிழமை) முன்னர், ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இந்த கால அவகாசம் போதுமானது அல்ல.
வார்டுகள் பிரதிநித்துவம் என்பது உள்ளாட்சிமன்றங்களின் அடிப்படை என்பதால், இது சம்பந்தமாக பரிசீலனை செய்ய, கூடுதல் காலம் தேவை. எனவே - வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை, குறைந்தது, பொங்கல் விடுமுறைகள் பிறகு - அதாவது ஜனவரி 21 (திங்கள்கிழமை) வரை - நீட்டிக்க தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 2, 2018; 10:30 am]
[#NEPR/2018010201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|