NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில், மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் ஒருங்கிணைப்பில் - அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து - இரத்த தானம் முகாம்கள் - காயல்பட்டினத்தில் - கடந்த சில மாதங்களாக - நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, கே.எம்.டி மருத்துவமனை வளாகத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து நடைபெற்ற இரத்த தானம் முகாமில், 88 பேர் கலந்துக்கொண்டார்கள். இதில் 10 பேர் - பெண்கள் ஆவர்.
அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு அக்டோபர் 3 அன்று, நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் ஒருங்கிணைப்பில் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் - 126 பேர் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில் 27 பேர் பெண்கள்.
இந்த முகாம் - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டது.
முதன்முறை இரத்த தானம் செய்வோரை ஊக்குவிக்கும் நோக்கிலும், இளைஞர்கள் அதிகளவில் இரத்த தானம் செய்ய ஊக்குவிக்கும் நோக்கிலும், விடுமுறையில் காயல்பட்டினம் வந்துள்ளவர்கள் இரத்த தானம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாகவும் - டிசம்பர் 28 வியாழனன்று - ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், நடப்பது என்ன? குழுமத்தின் - இளைஞர்கள் பிரிவு குழுமமான NeXTGen Kayalites குழுமத்தின் - ஏற்பாட்டில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இறைமறையில் இருந்து சில வசனங்களை ஹாபிழ் ஃபஸல் இஸ்மாயில் ஓத, முகாம் துவங்கியது.
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, MEGA அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.மொஹிதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.*
சகோதரர் HSAC அபூபக்கர் - வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து - சிங்கப்பூர் அரசு பொதுமருத்துவமனையில் பணிப்புரியும் காயல்பட்டினம் பூர்வீக மருத்துவர் - சிறப்பு விருந்தினர் டாக்டர் புஹாரி ஷாஜஹான் சிறப்புரையாற்றினார்.
50க்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் செய்துள்ள ஹாஜி எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், ரெட் ஸ்டார் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் இரத்த வங்கிப்பிரிவின் தலைமை மருத்துவர் - டாக்டர் பொன்ரவி - சிறப்புரையாற்றினார்.
சகோதரர் SN சேக் துஃபைல் நன்றியுரை வழங்கினார்.
காலை 10 மணிமுதல் மதியம் 1:30 வரை நடைபெற்ற முகாமில், நகரின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த 41 பேர் இரத்த தானம் செய்தார்கள். இதில் பெருவாரியானோர் - இளைஞர்கள் மற்றும் முதன்முறையாக இரத்த தானம் செய்வோர் ஆவர்.
இரத்த தானம் செய்த அனைவருக்கும், அரசு முத்திரையிடப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் இதன்போது நகரப் பிரமுகர்களால் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த இரத்த தானம் முகாமுக்கான ஏற்பாடுகளை - சகோதரர் HSAC அபூபக்கர் மற்றும் சகோதரர் SN ஷேக் துஃபைல் ஆகியோர் தலைமையிலான இளைஞர்கள் குழு செய்திருந்தது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தரப்பில் - டாக்டர் பொன்ரவி, டாக்டர் மார்ட்டின் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியினர் செய்திருந்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 30, 2017; 5:00 pm]
[#NEPR/2017123002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |