காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வார்டுகள் குறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழமத்தின் வரைவு ஆவணங்கள், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் அனைத்தையும் மறுவரையறை செய்ய - செப்டம்பர் மாதம், தமிழக அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து - வரைவு வார்டு விபரங்கள் - சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 4 க்கு முன்னர் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதனை கருத்தில் கொண்டு – நேற்று (1-1-2018) காலை - இறைவனின் உதவியுடன் - இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில், துஃபைல் வணிக வளாக, ஹனியா சிற்றரங்கில் நடந்தது.
நகரின் அனைத்து பகுதியில் இருந்தும் கலந்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள் முன்பு - புதிதாக வெளியிடப்பட்டுள்ள வார்டுகள் வரைமுறை குறித்து விளக்கம் வழங்கப்பட்டது. மேலும் - மாதிரி பரிந்துரைகளும் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனை அடிப்படையில் கூடுதலான ஒரு பரிந்துரையும் பின்னர் தயாரிக்கப்பட்டது. அவைகள் அனைத்தும் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக - சமூக ஊடகங்கள் வாயிலாக, அனைவருக்கும் பகிரப்பட்டுள்ளது.
இதற்கிடையே - இது சம்பந்தமான விரிவான தகவல்கள், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - நகரின் அனைத்து ஜமாஅத்துகளிடமும், அமைப்புகளிடமும் - இன்று நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
நகரின் தற்போதைய நிலை, எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை பார்வையிட்டு, நகராட்சி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைமுறைக்கு - ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நகராட்சிக்கு வழங்கிடவும் - ஜமாஅத்துகளிடமும், அமைப்புகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதன் தகவலை - நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கும் பட்சத்தில் - அந்த ஆட்சேபனைகளை நடப்பது என்ன? குழுமம் - தன் சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும் என்ற தகவலும் - ஜமாஅத்துகளிடமும், அமைப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 2, 2018; 3:30 pm]
[#NEPR/2018010202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|