20 வயதுக்குட்பட்டோருக்கான – தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைப்பில், முதலமைச்சர் கோப்பைக்கான 20 வயதுக்குட்பட்டோர் மாவட்ட கால்பந்து போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜனவரி 3 முதல் ஜனவரி 4ம் நாள் வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து காயல்பட்டினம் - காயல் ஸ்போட்டிங் கிளப் அணி உட்பட 13 அணிகள் பங்கேற்றன.
ஜனவரி 03ஆம் நாள் பிற்பகலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் KSC அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நாசரேத் MRC அணியையும், மாலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் சமனுடைப்பு முறையிலும் (1 - 1) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
KSC - SDAT ஸ்போட்ஸ் ஹாஸ்டல் அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி ஜனவரி 04ஆம் நாள் காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.
ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் SDAT ஸ்போட்ஸ் ஹாஸ்டல் அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற & வெற்றிக்கு முனைந்த அணி வீரர்களுக்கு முறையே தலா ரூ. 1000, ரூ. 750 - வீரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய KSC அணியின் அமீன், தாவூத், இம்ரான், மஜீத் ஆகிய வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாங்காங்கிலிருந்து...
முத்து இப்றாஹீம்
|