காயல்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அனைவருக்கும், நாட்டு விதைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்தவர் நிழற்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத். இவர், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் பீ.எம்.ஆயிஷா ஸமீஹாவுக்கும் – எம்.ஹாஜா நதீம் என்ற இளைஞருக்கும் நேற்று (07.01.2018. ஞாயிற்றுக்கிழமை) காலையில் – மணமகள் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் உடைய நண்பர் கோவை விஜயகுமார் ஏற்பாட்டில் – சென்னையிலிருந்து கோவைக்குத் தருவிக்கப்பட்டு, அங்கிருந்து காயல்பட்டினத்திற்கு எடுத்து வரப்பட்ட நாட்டு விதைகள் – திருமண நிகழ்ச்சியின் நிறைவில் – பங்கேற்ற அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கத்தரி, வெண்டை, தக்காளி, கோஸ், காளி ஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிச் செடி விதைகளும், அரைக் கீரை, சிறு கீரை, புளிச்ச கீரை, தண்டங்கீரை, முடக்கறுத்தான் கீரை உள்ளிட்ட கீரைச் செடி விதைகளும், பப்பாளி உள்ளிட்ட பழ மரங்களின் விதைகளும் இதில் அடக்கம்.
மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அவ்விதைகளை விரும்பிக் கேட்டுப் பெற்றுச் சென்றனர். மக்கள் திரளும் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நடைமுறை வரவேற்கத்தக்கது என அவர்கள் புகழ்ந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.
|